கைது செய்து விடுவித்த பிறகும் அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா
கைது செய்து விடுவித்த பிறகும் அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா
ADDED : பிப் 07, 2026 06:33 AM

கோவை: அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள், ஐந்தாம் நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலமுறை ஊதியம், பதவி உயர்வு, ஓய்வூதியம், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐந்தாம் நாளான நேற்று, தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒப்பாரி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 3 ஆண்கள் உட்பட 600 பேர் கைது செய்யப்பட்டனர். மாலை விடுவிக்கப்பட்டதும், மீண்டும் தெற்கு தாலுகா அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவில், செல்போன்களில் லைட்டை ஒளிர விட்டு, கோஷம் எழுப்பினர்.
'அரசு எங்களை அழைத்துப் பேச்சு நடத்த வேண்டும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் எங்களின் போராட்டம் தொடரும். விடிய விடிய இங்கேயே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோம். தேர்தலில் ஒரு விரல் புரட்சியை நிகழ்த்திக் காட்டுவோம்' என, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர்.
