/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழைக்கு முன் சீரமைக்க வேண்டும் ஆபத்தான சூழலில் அங்கன்வாடிகள்
/
மழைக்கு முன் சீரமைக்க வேண்டும் ஆபத்தான சூழலில் அங்கன்வாடிகள்
மழைக்கு முன் சீரமைக்க வேண்டும் ஆபத்தான சூழலில் அங்கன்வாடிகள்
மழைக்கு முன் சீரமைக்க வேண்டும் ஆபத்தான சூழலில் அங்கன்வாடிகள்
ADDED : மே 04, 2025 10:44 PM

கோவை மாவட்டத்தில், 1,444 அங்கன்வாடி மையங்கள், 196 குறு அங்கன்வாடி மையங்கள் என, 1,640 மையங்கள் உள்ளன. மாநகராட்சி பகுதிகளில் மட்டும், 300க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் உள்ளன. அடிப்படை கல்வியின் அஸ்திவாரமாக திகழும் அங்கன்வாடி மையங்கள் பல, கட்டமைப்பில் மோசமாக உள்ளன.
இவற்றில் பெரும்பாலான கட்டடங்கள், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. ஆண்டுகள் கடந்தும் முறையான பராமரிப்பின்றி இருப்பதால், குழந்தைகள் ஆபத்தான சூழலில் படிக்கும் அவலம் உள்ளது.
உதாரணத்துக்கு, சிங்காநல்லுார், 61வது வார்டு கள்ளிமடையில் உள்ள அங்கன்வாடி மையத்தில், 25க்கு மேற்பட்ட குழந்தைகள் பயில்கின்றனர். இக்கட்டடம், 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. சிமென்ட் ஓட்டில் ஓட்டைகள், பக்கவாட்டு சுவரில் கிரில் கம்பிகள் பலவீனமாக உள்ளன.
இதனால், மழை காலங்களில் மையத்துக்குள் தண்ணீர் ஒழுகுவதுடன், ஆபத்தான கட்டடத்தில் குழந்தைகள் பயத்துடன் படிக்கின்றனர். இது போன்ற மோசமான நிலையில் இருக்கும் அங்கன்வாடி மையங்களை பராமரித்து, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது அரசின் கடமை.
அதேபோல், சுங்கம், வெள்ளக்கிணறு, சரவணம்பட்டி, உருமாண்டாம்பாளையம், கோட்டைமேடு, பி.என்.புதுார், சங்கனுார், கண்ணப்பநகர், நஞ்சுண்டாபுரம், குறிச்சி மைதானம் உள்ளிட்ட இடங்களில் இன்னும் பழைய கட்டடத்தில்தான், அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன.
எம்.எல்.ஏ., எம்.பி., நிதிகளில், பல அங்கன்வாடி கட்டடங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. ஆனால், யாரும் கண்டுகொள்ளாத கட்டடங்கள், கேட்பாரற்று கிடக்கின்றன. தற்போது, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ்(ஐ.சி.டி.எஸ்.,), அங்கன்வாடி மையங்கள் பராமரிக்கப்படுகின்றன.
அடிப்படை கல்விக்காக ஏழை குடும்பங்களை சேர்ந்த, குழந்தைகள் நம்பியிருக்கும் இந்த அங்கன்வாடி மையங்களை, வரும் பருவமழைக்கு முன் மேம்படுத்த வேண்டியது அவசியமான ஒன்று.
அதேபோல், ஏதும் அறியாத பிஞ்சு குழந்தைகளுக்கு ஆபத்து நிகழாமல், முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டியது, ஒரு நல்ல அரசின் கடமை!