/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டூவீலர் ஸ்டாண்டாக மாறிய அண்ணா வணிக வளாகம்
/
டூவீலர் ஸ்டாண்டாக மாறிய அண்ணா வணிக வளாகம்
ADDED : ஜூலை 29, 2025 08:31 PM

மேட்டுப்பாளையம்; பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, நகராட்சி அண்ணா வணிக வளாக காலியிடம், டூவீலர் ஸ்டாண்ட் ஆக மாறியுள்ளது.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, நகராட்சிக்கு சொந்தமான அண்ணா வணிக வளாகத்தில், 45 கடைகள் உள்ளன.
ஏலம் எடுத்த வியாபாரிகள் கடைகளை, நடத்தி வருகின்றனர். இந்த வளாகத்தில் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும், வாடிக்கையாளர்களின் வாகனங்கள் நிறுத்த, காலி இடம் விடப்பட்டுள்ளது. ஆனால் இந்த இடத்தில், வெளியூர் வேலைக்கு செல்லும் ஆட்கள் வாகனங்களை நிறுத்தி வருகின்றனர்.
இது குறித்து நகராட்சி கடை வியாபாரிகள் கூறியதாவது: நகராட்சி நிர்வாகம் கடைகளின் வாடகையை உயர்த்தி உள்ளது. இந்த வாடகையை மிகுந்த சிரமத்திற்கு இடையே செலுத்தி வருகிறோம். கடைகளின் வாயிலாக மாதம், 10 லட்சம் ரூபாய் நகராட்சிக்கு வருவாய் கிடைக்கிறது. கடைகளின் முன்புள்ள காலி இடத்தில், வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி பொருட்களை வாங்கி வந்தனர். ஆனால் அந்த இடத்தில் தற்போது, கோவை, திருப்பூர், ஊட்டி, கோத்தகிரி ஆகிய ஊர்களுக்கு வேலைக்கு செல்பவர்கள், தங்கள் வாகனங்களை காலையிலேயே, நிறுத்தி விட்டு செல்கின்றனர். காலை, 9:00 மணிக்குள் வணிக வளாகம் முழுவதும், டூவீலர் ஸ்டாண்ட் போல் வாகனங்கள் நிறுத்தி விடுகின்றனர். மேலும் கடைகளுக்கு வேலைக்கு வருபவர்களின் வாகனங்கள், நிறுத்த இடம் இல்லாத நிலை ஏற்படுகிறது.
இதனால் கடைகளுக்கு பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்கள், நுழைய முடியாமல் திரும்பிச் செல்கின்றனர். சில வாடிக்கையாளர்கள் வேறு இடங்களுக்கு சென்று பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் கடை வியாபாரிகளுக்கு தினமும் நஷ்டம் ஏற்படுகிறது.
எனவே, அண்ணா வணிக வளாகத்தில், வெளியூர் வேலைக்கு செல்பவர்கள் வாகனங்கள் நிறுத்துவதை தடை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில்,நகராட்சி அலுவலகம் முன்பு, கடை வியாபாரிகள் போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.