/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளில் ஆண்டு விழா; கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றம்
/
பள்ளிகளில் ஆண்டு விழா; கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றம்
பள்ளிகளில் ஆண்டு விழா; கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றம்
பள்ளிகளில் ஆண்டு விழா; கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றம்
ADDED : பிப் 16, 2024 12:15 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில், ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
ஆனைமலை அருகே கோட்டூர் அரசு தொடக்கப்பள்ளியின் (உருது) ஆண்டு விழா, தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. அதில், மாணவர்கள், தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர். ஆனைமலை வட்டார வளர்ச்சி கல்வி அலுவலர் சின்னப்பராஜ் பேசினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் கலாவதி, கவுன்சிலர்கள் மஞ்சுளா தேவி, அஜீஸ் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் காளீஸ்வரன், ஆசிரியர்கள், பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் முரளி நன்றி கூறினார்.
* வக்கம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் தலைமையாசிரியர் ருக்மணி வரவேற்றார். ஆசிரியர் பிரேமலதா ஆன்டறிக்கை வாசித்தார். கலை நிகழ்ச்சிகளை ஆசிரியர் ராஜேஸ்வரி தொகுத்து வழங்கினார்.
முதல் மதிப்பெண் மற்றும் கலைத்திருவிழாவில் வட்டார அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. விழாவுக்கு தேவையான உதவிகளை ஊராட்சி தலைவர் செய்து கொடுத்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
* தொப்பம்பட்டி நடுநிலைப் பள்ளியில், 25ம் ஆண்டு வெள்ளி விழா, அறிவியல் கண்காட்சி விழா, மாணவர்களுக்கான விளையாட்டு விழா என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. வெள்ளாளபாளையம் ஊராட்சி தலைவர் பத்மபிரியா தலைமை வகித்தார்.
பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மனோரஞ்சிதம், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கதிரேசன் முன்னிலை வகித்தனர்.பள்ளித் தலைமையாசிரியர் கணேசன் வரவேற்றார். இந்த கல்வியாண்டின் ஆண்டறிக்கையினை பட்டதாரி ஆசிரியர் தேவி சமர்ப்பித்தார்.
வடக்கு வட்டாரக்கல்வி அலுவலர் வெள்ளியங்கிரி பேசினார். ஒன்றியக் கவுன்சிலர் தங்கமணி, வார்டு கவுன்சிலர்கள், முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து,அறிவியல் கண்காட்சி நடந்தது. காற்றழுத்தமானி, காற்றாலை மின் உற்பத்தி, மின் துாக்கி, மின்விசிறி, எளிய மின்சுற்றுகள், மழைநீர் சேகரிப்பு, போக்குவரத்து காவலரின் கையுறை போன்ற பல்வேறு படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தினர்.
இந்த ஆண்டு பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் வந்த மாணவர்களுக்கு நினைவுப் பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. அறிவியல் கண்காட்சியிலும், பல்வேறு விளையாட்டுகளிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
மாணவர்களின் பேச்சு, கதை கூறுதல், நடனம், பாடல், நாடகம், கராத்தே போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பட்டதாரி ஆசிரியர் மகாலட்சுமி நன்றி கூறினார்.
* கிணத்துக்கடவு, நெ.,10 முத்துார், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை நர்மதா வரவேற்றார். ஊராட்சி தலைவர் சதீஸ்குமார் முன்னிலை வகித்தார். பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.
* நல்லட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. கிணத்துக்கடவு வட்டாரக் கல்வி அலுவலர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் செல்விராணி வரவேற்றார்.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நன்றாக படித்து முதல் மதிப்பெண் எடுத்த எட்டு மாணவர்கள் மற்றும் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்த ஒரு மாணவிக்கும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும், மாணவ, மாணவியரின் பாடல், பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், நாடகம், மாறுவேடம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாணவர்களுக்கு நன்கொடையாளர் நடராஜ் பரிசுகளை வழங்கினார். கணித ஆசிரியர் அசோக்குமார் நன்றி கூறினார். ஊராட்சி துணைத்தலைவர் கருப்புசாமி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பெருமாள்சாமி, மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மடத்துக்குளம்
மடத்துக்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், ஆண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர்களின் இசை, நடனம், கிராம நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மடத்துக்குளம் கல்வி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர், சத்துணவு பணியாளர்கள், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள், பொதுமக்களும் பங்கேற்றனர்.