/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விடைத்தாள் திருத்தும் பணி; தயாராகும் ஆசிரியர்கள்
/
விடைத்தாள் திருத்தும் பணி; தயாராகும் ஆசிரியர்கள்
ADDED : மார் 08, 2024 12:05 PM
பொள்ளாச்சி:பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும், 28ம் தேதி துவங்க வாய்ப்புள்ளதால், அதற்கேற்ப ஆசிரியர்கள் தயாராகி வருகின்றனர்.
தமிழகத்தில், மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, வரும், 25ம் தேதி நிறைவடைகிறது. தொடர்ந்து, 26ம் தேதி முதல், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்குகிறது.
இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்க எவ்விதமான உத்தரவும் கிடைக்கப்பெறவில்லை எனவும், அதேநேரம், 28ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி துவக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பொள்ளாச்சியில் விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்க, இதுவரை எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. வழக்கமாக, மொழித் தேர்வுகள் முடிந்தவுடன் விடைத்தாள் திருத்தும் பணி துவக்கப்படும்.
அதேபோல, லோக்சபா தேர்தல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளதால், விரைந்து விடைத்தாள்களை திருத்தி மதிப்பீடு செய்ய பள்ளிக் கல்வித்துறை முனைப்பு காட்டி வருகிறது.
அதனால், வரும், 28ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி துவங்க வாய்ப்புள்ளது. அப்போதுதான், ஒரு மாத காலத்திற்குள், மதிப்பெண்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து, விரைந்து பொதுத்தேர்வு முடிவுகளை அறிவிக்க முடியும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

