/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதை பொருட்கள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி
/
போதை பொருட்கள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூன் 29, 2025 11:42 PM

பெ.நா.பாளையம்; போதைப் பொருட்களுக்கான எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா சார்பில் நடந்தது.
சர்வதேச போதை பொருட்கள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கான எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா மாருதி உடற்கல்வியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாருதி உடற்கல்வியியல் கல்லூரி இணை பேராசிரியர் அமுதன் வரவேற்றார். பெரியநாயக்கன்பாளையம் தலைமை காவலர் தனபால் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், போதை பொருட்களால் ஏற்படும் சமூக சீரழிவு குறித்து விளக்கப்பட்டது. விழிப்புணர்வு பேரணி பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் தொடங்கி, பெரியநாயக்கன்பாளையம் சார்பதிவாளர் அலுவலகம், அரசு பொது மருத்துவமனை, ரயில்வே பீடர் ரோடு வழியாக ரயில் நிலையம் சென்று ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் மாருதி உடற் கல்வியியல் கல்லூரி வளாகத்தை அடைந்தது. நிகழ்ச்சியில், மாருதி கல்லூரியில் சேர்ந்த, 85க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பேரணியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை மாணவர்கள் கைகளில் ஏந்தி சென்றனர். நிகழ்ச்சியில் மாருதி கல்லூரியின் உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் நீதிராஜா செய்து இருந்தார்.
இதே போல துடியலூர் போலீஸ் ஸ்டேஷன், அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, பெண்கள் உயர்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ண இன்ஜினியரிங் கல்லூரி, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு பள்ளி, கல்லூரிகளின் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.