/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பண்ணை குட்டைக்கு நிதி ஒதுக்க எதிர்பார்ப்பு
/
பண்ணை குட்டைக்கு நிதி ஒதுக்க எதிர்பார்ப்பு
ADDED : அக் 31, 2024 10:07 PM
உடுமலை ;குடிமங்கலம் ஒன்றியத்தில், நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்த பண்ணைக்குட்டைகள் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
குடிமங்கலம் ஒன்றியத்தில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில், இப்பகுதிக்கு சராசரி அளவுக்கு மழை பெய்கிறது. இருப்பினும், மழை நீரை சேகரிக்க, போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால், மழைக்கு பின், நிலத்தடி நீர் மட்டம் சரிந்து, வறட்சி ஏற்படுகிறது.
விவசாயிகள் கூறியதாவது:
குடிமங்கலம் ஒன்றியத்தை வறட்சி மிகுந்த பகுதியாக கருதி, வேளாண் பொறியியல் துறையின், சோலார் மானியம் உட்பட திட்டங்களில் புறக்கணிக்கும் நிலை உள்ளது. பருவமழை காலத்தில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து, சாகுபடி பரப்பும் கூடுதலாகி வருகிறது.
இந்நிலையை பாதுகாக்க, பண்ணைக்குட்டைகள் அமைக்க, வேளாண் துறை, ஊரக வளர்ச்சித்துறை வாயிலாக சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தலாம். பருவமழை காலத்தில், பண்ணைக்குட்டையில் மழை நீரை சேகரிக்கலாம். பிற நாட்களில், போர்வெல் தண்ணீரை சேகரித்து, பாசனம் செய்யலாம்.
எனவே, குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களுக்கு முக்கியத்துவம் வழங்கி, பண்ணைக்குட்டைகள் அமைப்பதற்கு மானியம் ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.