ADDED : மார் 05, 2026 04:49 AM
கோவை: மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
மாவட்டத்தில் மொத்தம் 1,401 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அரிசி அட்டைகள், மிகவும் ஏழ்மையான குடும்ப அட்டைகள், சர்க்கரை அட்டைகள், காவல் அட்டைகள் என மொத்தம் 13,19,691 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் பண்டமில்லா அட்டை('நன்' அட்டை) மட்டும் 10,517 ஆக உள்ளது.
கடந்த ஓராண்டில் 14 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் 'மகளிர் உரிமைத் தொகை' உள்ளிட்ட பல்வேறு நிதி உதவித் திட்டங்களில் பயன்பெறவே, பலரும் புதிய கார்டுகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
குறிப்பாக, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் பெறப்பட்ட மனுக்களில், புதிய ரேஷன் கார்டு கோரிக்கை அதிகமாக இருந்ததாகவும், இந்த மனுக்கள் தற்போது பரிசீலனையில் உள்ளதாகவும் வழங்கல் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
