/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு
/
பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு
ADDED : ஏப் 28, 2025 10:44 PM

-- நிருபர் குழு -
பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், நடப்பு கல்வியாண்டு பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. வட்டாரத்தலைவர் மாணிக்கராஜ் தலைமை வகித்தார். முன்னதாக, வட்டாரச்செயலாளர் மல்லிகார்ஜுனசாமி வரவேற்றார்.
பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் தங்கராசு, பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர்கள் வீரம்மாள், அம்புஜம், கிருஷ்ணவேணி, சாந்தலட்சுமி, பொறுப்பு தலைமையாசிரியர் அமலராணி, ஆசிரியர் பயிற்றுநர் பாக்கியலட்சுமி ஆகியோரை வாழ்த்தினார்.
ஓய்வு பெற்றோர் பிரிவு பொதுச்செயலாளர் ஆறுமுகம், கோவை மாவட்ட தலைவர் மோகனசுந்தரம், மாவட்ட செயலாளர் தங்கராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வட்டார பொருளாளர் கோசலாதேவி நன்றி கூறினார்.
மடத்துக்குளம்
மடத்துக்குளம் வட்டாரத்தில் பணி நிறைவு பெற்ற அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா நடந்தது.
மடத்துக்குளம் வட்டாரம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில், பணி நிறைவு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா, கணியூர் தனியார் மண்டபத்தில் நடந்தது.
மன்றத்தின் ஒன்றியத்தலைவர் கணேஷ்சங்கர் தலைமை வகித்தார். செயலாளர் ஜோதிராமன் வரவேற்றார். பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. மன்றத்தின் நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் விழாவில் பங்கேற்றனர். வட்டார பொருளாளர் புவனேஸ்வரி நன்றி தெரிவித்தார்.
குடிமங்கலம்
குடிமங்கலம் வட்டாரம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், முப்பெரும் விழா நடந்தது. பணிநிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கும், 25 ஆண்டு பணி செய்த ஆசிரியர்களுக்கும், நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கும் பாராட்டு விழா பெதப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்தது.
ஆசிரியர் கூட்டணி குடிமங்கலம் வட்டாரத்தலைவர் ஜக்கியா அக்தர் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் குமார் வரவேற்றார். தொடர்ந்து ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு பெருமைபடுத்தப்பட்டது.
பல்வேறு அரசு பள்ளி ஆசிரியர்கள், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.