/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அ'சோக புரத்தில்' இறந்த மனிதர்கள் குப்பைக்கு சமம்?
/
அ'சோக புரத்தில்' இறந்த மனிதர்கள் குப்பைக்கு சமம்?
அ'சோக புரத்தில்' இறந்த மனிதர்கள் குப்பைக்கு சமம்?
அ'சோக புரத்தில்' இறந்த மனிதர்கள் குப்பைக்கு சமம்?
ADDED : நவ 27, 2025 05:23 AM

பெ.நா.பாளையம்: கோவை புறநகர் பகுதிகளில் மயானங்கள் குப்பை கொட்டும் இடமாக மாறி வருவதால் இறந்தவர்களின் உடலை புதைக்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.
கோவை அசோகபுரம், குருடம்பாளையம் ஊராட்சிகள், நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி, கூடலூர் நகராட்சி, பிளிச்சி ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் அந்தந்த பகுதிகளில் உள்ள மயானங்களில் குவித்து, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்படுகின்றன. இதனால் இறந்தவர் உடலை மயானங்களில் வைத்து எரிக்க முடியாமலும், புதைக்க முடியாமலும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில்,' குருடம்பாளையம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் 10 டன் குப்பை மாருதி நகர் அருகே உள்ள மயானத்தின் முன்புறம் கொட்டி வைக்கப்படுகின்றன. அவை மக்கி, அழுகி, நாற்றம் எடுத்து, அப்பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன.
கூடலூர் நகராட்சி சார்பில் சேகரிக்கப்படும் குப்பை சாமி செட்டிபாளையம் அருகே உள்ள பள்ளத்தை ஒட்டிய மயானம் அருகேயும், அசோகபுரம் ஊராட்சி குப்பை ஸ்டேட் பேங்க் காலனி பின்புறம் உள்ள மயானத்தில் தடுப்பணை அருகேயும், பிளிச்சி ஊராட்சிக்குட்பட்ட மத்தம்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள மயானத்திலும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. பகல், இரவு நேரங்களில் அங்கு குப்பை தீ வைத்து எரிக்கப்படுகின்றன.
கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் ஆகிய இடங்களில் மின் மயானம் இருப்பதால், பெரும்பான்மையினர் இறந்தவர் உடல்களை அங்கு எடுத்து சென்று எரியூட்டு கின்றனர். மயானத்தில் எரியூட்டும் செலவு குறைந்தபட்சம், 30 ஆயிரம் ரூபாய் ஆகிறது.
மின் மயானத்தில், 3 ஆயிரம் ரூபாய் செலவில் உடல்கள் எரியூட்டப்படுகின்றன. இதனால் மயானத்துக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதை தங்களுக்கு சாதகமாக உள்ளாட்சி நிர்வாகங்கள் பயன்படுத்தி, குப்பைகளை சுடுகாட்டில் குவிக்க ஆரம்பித்து விட்டன' என்றனர்.
இது குறித்து உள்ளாட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'பல்வேறு ஊராட்சி, பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ள போதுமான இடவசதி இல்லை.எந்தப் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை மையத்தை அமைத்தாலும், அருகே வசிப்பவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இதனால் மயானத்தின் ஒரு பகுதியில் குப்பைகளை குவித்து தரம் பிரிக்க வேண்டி உள்ளது. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான நவீனமுறையிலான திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பெரிய அளவில் செயல்படுத்தினால் மட்டுமே, இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும்' என்றனர்.

