/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் வங்கதேசத்தினர் தங்கியுள்ளார்களா
/
கோவையில் வங்கதேசத்தினர் தங்கியுள்ளார்களா
ADDED : ஜன 22, 2025 12:29 AM
கோவை; போலி ஆவணங்கள் வாயிலாக தங்கியிருந்த, வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், கோவையில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களின், ஆவணங்களை சரிபார்க்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வட மாநில தொழிலாளர்கள் போர்வையில், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், நமது நாட்டுக்குள் ஊடுருவி, கோவை மற்றும் திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் தங்கியிருக்கின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தங்கியிருந்த, 31 வங்கதேசத்தினரை தீவிரவாத தடுப்பு போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்த ஆவணங்களை சோதனை செய்ததில், ஆதார் அட்டைகள் போலி என கண்டறியப்பட்டது. தொடர்ந்து நடத்திய சோதனையில், வங்க தேசத்தினர், 17 பேர் கைது செய்யப்பட்டனர். சோதனை தொடர்ந்து நடக்கிறது. கோவையிலும் தொழில்நிறுவனங்கள் அதிகம் உள்ள நிலையில், இங்கும் சோதனை செய்ய போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கூறுகையில்,''கோவை மாநகரை பொறுத்தவரை, சட்ட விரோதமாக யாராவது தங்கியுள்ளார்களா என்பது குறித்து, தொடர் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே தொழிலாளர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, அதில் உள்ள முகவரிகளிலும் விசாரிக்கப்பட்டது. அதில் உண்மையான விபரங்களே இருந்தன. இருப்பினும், தொடர் ஆய்வு நடத்தப்படுகிறது. தொழில் நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் முழு விவரங்களை சேகரித்து, அதன் உண்மை தன்மையை ஆராய அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.