/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புது கடைகள் கட்டாமல் புது கட்டணம் வசூலிப்பதா! அண்ணா மார்க்கெட் வியாபாரிகள் போராட்டம்
/
புது கடைகள் கட்டாமல் புது கட்டணம் வசூலிப்பதா! அண்ணா மார்க்கெட் வியாபாரிகள் போராட்டம்
புது கடைகள் கட்டாமல் புது கட்டணம் வசூலிப்பதா! அண்ணா மார்க்கெட் வியாபாரிகள் போராட்டம்
புது கடைகள் கட்டாமல் புது கட்டணம் வசூலிப்பதா! அண்ணா மார்க்கெட் வியாபாரிகள் போராட்டம்
ADDED : ஜூலை 12, 2025 01:00 AM

கோவை; புதிதாக கடைகள் கட்டாமலேயே, புதிய கட்டணம் வசூலிக்கும் வகையில் ஏலம் விடப்பட்டிருப்பதால், கோவை மாநகராட்சி அண்ணா தினசரி மார்க்கெட் வியாபாரிகள், நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
கோவை மாநகராட்சி, 69வது வார்டு, மேட்டுப்பாளையம் ரோட்டில் அண்ணா தினசரி மார்க்கெட் செயல்படுகிறது. தரைக்கடைகள், மேடை கடைகளை இடித்து விட்டு, புதிதாக, 476 கடைகள் கட்டப்படுகின்றன. முதல்கட்டமாக, 81 கடைகள் மட்டும் கட்டப்பட்டு உள்ளன.
இதைத்தொடர்ந்து, கடை ஒன்றுக்கு தினசரி வாடகையாக, 300 ரூபாய், குப்பை கட்டணமாக, 25 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு மார்க்கெட் வியாபாரிகள் ஆட்சேபம் தெரிவித்து, மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தினசரி வாடகையை, 100 ரூபாயாக குறைக்க கோரினர்.
இதை பரிசீலித்த மாநகராட்சி நிர்வாகம், தின வாடகை ரூ.150, குப்பை கட்டணம் ரூ.10 என திருத்தியமைத்தது. இக்கட்டண விகிதப்படி வசூலிக்க, மார்க்கெட் கடைகள் ஏலம் விடப்பட்டன. இரண்டு கோடியே, 12 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
ஏலம் எடுத்தவர்கள் இனி புதிய கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்பதால், பழைய கடைகளில் வியாபாரம் செய்பவர்கள் அனைவரும், மார்க்கெட் வளாகத்துக்குள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மாநகராட்சி மத்திய மண்டல உதவி கமிஷனர் செந்தில்குமரன் பேச்சு நடத்தினார்.
வியாபாரிகள் கூறுகையில், 'பழைய கடைகளுக்கு நாளொன்றுக்கு, 20 ரூபாய் வாடகை, மூட்டை ஒன்றுக்கு, 3 ரூபாய் வீதம் சுங்கம் கொடுக்கிறோம். கடைகளை புதுப்பித்துக் கொடுக்காமல் புதிய கட்டணம் கேட்பது சரியல்ல.
புதிதாக கட்டிய, 81 கடைகளில் மட்டும் புதிய கட்டணம் வசூலிக்கலாம்; அத்தொகையை மாநகராட்சி அலுவலகத்தில் நேரடியாக செலுத்துகிறோம். மற்ற கடைக்காரர்கள், புதிய கடை கட்டிக் கொடுத்ததும் செலுத்துகிறோம். ஏலம் எடுத்தவர்கள் வசூலிக்க வந்தால், புதிய கட்டணம் கேட்பார்கள்; அத்தொகையை கொடுக்க முடியாது' என தெரிவித்தனர்.
உதவி கமிஷனர் செந்தில்குமரனிடம் கேட்டதற்கு, ''அண்ணா மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளையும், கவுண்டம்பாளையம் எருக் கம்பெனி வளாகத்துக்கு தற்காலிகமாக மாற்றிக் கொள்ள கூறினோம். இரண்டே மாதத்தில் கடைகள் கட்டித் தருவதாக உறுதியளித்தோம். வியாபாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. 150 கடைகளை காலி செய்து தருவதாக கூறியுள்ளனர். அங்கு புதிய கடைகள் கட்டும் பணி விரைவில் துவங்கும்,'' என்றார்.