ADDED : செப் 01, 2026 09:12 PM
வடவள்ளி: மாநகராட்சி 36வது வார்டு, வடவள்ளி – இடையர்பாளையம் ரோட்டில், மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள், 2021ல் கோர்ட் உத்தரவுப்படி அகற்றப்பட்டனர். அதன்பின் வடவள்ளி –- இடையர்பாளையம் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது.
ஆக்கிரமிப்பு இடத்திலிருந்த மூதாட்டி ஒருவர், நேற்று வடவள்ளி –- இடையர்பாளையம் ரோட்டோரத்தில் பெட்டிக்கடை வைக்க முயன்றார். நெடுஞ்சாலைத்துறையினர் ஆட்சேபித்தனர்.
அப்பகுதியில் இருந்த 10 குடும்பத்தினர் திரண்டு நெடுஞ்சாலைத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வடவள்ளி போலீசார், வருவாய்த்துறையினர் பேச்சு நடத்தினர்.
அதன்பின், பேரூர் தாலுகா அலுவலகத்துக்கு சென்றபோது, வீடு இல்லாதவர்களுக்கு, எங்கு சாத்தியம் உள்ளதோ அங்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தாசில்தார் சேகர் உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
