ADDED : செப் 01, 2026 09:12 PM
சுந்தராபுரம்: சுந்தராபுரம், காமராஜ் நகர் அருகே பேக் கடை நடத்துபவர் உக்கடம், ஜி.எம். நகரை சேர்ந்த மன்சூரலி, 45. கடந்த 28ம் தேதி இவர் கடையிலிருந்த போது, இந்திரா நகர், முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த உதயசூரியன், 35 வந்தார். மன்சூரலியிடம், விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை கேட்டார். மன்சூரலி பின்னர் தருவதாக கூறியதும், தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அப்போது அருகே சில்லி சிக்கன் கடை நடத்தும் ஷேக் முஹமது, அவரது சகோதரர் நிசார் ஆகியோர் வந்து, உதயசூரியனிடம் வாக்குவாதம் குறித்து கேட்டனர்.
அவர்களையும் உதயசூரியன் மிரட்டினார். மன்சூரலி ரூ.500 கொடுத்தார். பெற்றுக்கொண்ட உதயசூரியன், மீண்டும் வரும்போது ரூ.2 ஆயிரம் தரவேண்டும். மறுத்தால் கடையை காலி செய்ய வைத்துவிடுவேன் என மிரட்டி சென்றுள்ளார். புகாரின்படி சுந்தராபுரம் போலீசார் உதயசூரியனை கைது செய்தனர்.
