/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அரோகரா' கோஷம் முழங்க சுவாமி திருக்கல்யாண உற்சவம்
/
'அரோகரா' கோஷம் முழங்க சுவாமி திருக்கல்யாண உற்சவம்
ADDED : அக் 29, 2025 12:23 AM

- நிருபர் குழு -
முருகப்பெருமான், அசுர குணங்களை கொண்ட, சூரனை வதம் செய்து, உலக உயிர்களை காத்தருளும் கந்த சஷ்டி விழா, கடந்த, 22ம் தேதி முருகன் கோவில்களில் துவங்கியது. நேற்று முன்தினம் சக்தியிடம் வேல் வாங்கி, ஆக்ரோஷமாக எழுந்தருளிய முருப்பெருமான், சூரனை வதம் செய்து வெற்றி கொள்ளும் சூரசம்ஹாரம் நடந்தது. இதையடுத்து, நேற்று கோவில்களில் சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
பொள்ளாச்சி கடைவீதி சுப்ரமணிய சுவாமி கோவில், சுவாமிக்கு நான்கு கால அபிேஷக ஆராதனைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. கடந்த, 26ம் தேதி மாலை, வேல் வாங்கும் உற்சவமும், நேற்று முன்தினம் சூரசம்ஹாரமும் நடந்தது.
தொடர்ந்து, நேற்று காலை, 7:00 மணிக்கு மகா அபிேஷகம், மாலை, 6:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, திருக்கல்யாண உற்சவத்தை கண்டுகளித்தனர். இன்று மாலை, 6:00 மணிக்கு திருஊஞ்சல் உற்வசம் நிகழ்ச்சி நடக்கிறது.
கிணத்துக்கடவு நெகமம், காளியப்பன்பாளையம் தங்கவேல் அய்யன் வேலாயுத சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழாவில், கோ பூஜை, விநாயகர் வழிபாடு, மகாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் உற்சவ கலச பூஜை, சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கிணத்துக்கடவு, முத்துமலை முருகன் கோவில் கந்த சஷ்டி விழாவில், நேற்று காலை சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. கோவில் வளாகத்தில் சுவாமி தேரோட்டம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வால்பாறை வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று காலை, 11:30 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. கோவில் வளாகத்தில் மணவறையில் வைக்கப்பட்டிருந்த உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானைக்கு மதியம், 12:10 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகப்பெருமான் தேவியருடன் எழுந்தருளி, வால்பாறை நகரின் முக்கிய வீதி வழியாக திருவீதி உலா வந்து அருள்பாலித்தார்.
உடுமலை உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் எழுந்தருளியுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று காலை, 10:30க்கு, வள்ளி தெய்வானை உடனமர் சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. பக்தர்கள் விரதத்தை முடித்துக்கொண்டு, சுவாமியை வழிபட்டனர். இரவு, 7:00 மணிக்கு, வெள்ளி ரதத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது.
பாப்பான்குளம் ஞான தண்டாயுதபாணி கோவிலில், நேற்று மாலை, 5:00 மணிக்கு, விவாக பூர்வாங்க பூஜைகள் நடந்தன. விநாயகர் கோவிலிருந்து, பக்தர்கள் திருமண சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். இரவு, 7:00 மணிக்கு, திருமாங்கல்ய தாரணம், விருந்து சேருதல், தீபாராதனை, ஊஞ்சல் சேவை நடந்தது.

