/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாய்கள் கருத்தடையை உயர்த்த ஏற்பாடு
/
நாய்கள் கருத்தடையை உயர்த்த ஏற்பாடு
ADDED : ஆக 07, 2025 09:43 PM

கோவை; கோவை மாநகராட்சி பகுதிகளில் அதிகரித்து வரும் தெரு நாய்களால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர்.
நாய்களை கொல்வதற்கு தடை இருப்பதால், அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், வெறிநோய் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சி உதவி நகர்நல அலுவலர் பூபதி கூறியதாவது:
மாநகராட்சி பகுதிகளில் ஒரு லட்சம் தெரு நாய்கள் உள்ளன. உக்கடம், ஒண்டிப்புதுார், வெள்ளலுார், சீரநாயக்கன்பாளையம் ஆகிய நான்கு கருத்தடை சிகிச்சை மையங்களில் மாதம், 1,500 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது; அதை, 7,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டில் மட்டும், 13 ஆயிரம் நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளன. 16 ஆயிரம் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள நாய்களுக்கு அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் தடுப்பூசி செலுத்தப்படும். வெறிநோய் தடுப்பூசி ஆண்டுக்கு ஒரு முறை போடப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் நாய்களின் இனப்பெருக்கத்தை பெரும்பாலும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
ரேபிஸ் விழிப்புணர்வு அவசியம் 'ரேபிஸ் ஹாட்லைன்' மையத்தினர் கூறுகையில்,'கடந்த ஜூன், 24 முதல், 155க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. இதில், 12 நாய்களுக்கு வெறிநோய் உறுதி செய்யப்பட்டது. இரண்டு வீட்டு நாய்களுக்கு ரேபிஸ் தாக்கப்பட்டது தெரிந்தது.
செல்லப்பிராணி வளர்ப்போரிடம் 'நோய் தாக்காது' என்ற அலட்சியமும், விழிப்புணர்வு இன்மையும் காணப்படுகிறது. ரேபிஸ் குறித்த பாதிப்புகள், சந்தேகங்களுக்கு, 98437 89491 என்ற எண்ணில், 24 மணி நேரமும் அழைக்கலாம்' என்றனர்.

