ADDED : ஜூன் 06, 2026 03:43 AM

கோவை: பொது இடங்களில் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போஸ்டர், பிளக்ஸ், பேனர் வைப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ரவி தேஜா எச்சரித்துள்ளார்.
போத்தனூர் மேம் பாலம் பகுதியில் போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம் விதித்தார். மாநகரில் விளம்பர பலகை, மின்னணு திரை மற்றும் விளம்பர அட்டை ஆகியவற்றில் விளம்பரம் செய்ய மாநகராட்சி ஆணையரிடம் 15 நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.
அனுமதி பெறாமல் வைக்கும் விளம்பரங்கள் மற்றும் தொடர்புடைய விளம்பர அச்சு நிறுவனத்திற்கு அபராதமும், விளம்பரப் பலகைகள் வைப்பவர்கள் மீது 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.20,000 அபராதம் விதிக்கப்படும்.பிளக்ஸ், விளம்பர அட்டைகள் வைப்பவர்கள் மீது ஓராண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று ஆணையர் எச்சரித்துள்ளார்.
