/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு கல்லுாரியில் கலைத்திருவிழா போட்டி; ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்
/
அரசு கல்லுாரியில் கலைத்திருவிழா போட்டி; ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்
அரசு கல்லுாரியில் கலைத்திருவிழா போட்டி; ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்
அரசு கல்லுாரியில் கலைத்திருவிழா போட்டி; ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்
ADDED : அக் 10, 2025 12:18 AM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கல்லுாரி கலைத்திருவிழா நடந்தது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், அரசு கல்லுாரிகளில், கல்லுாரி கலைத்திருவிழா கொண்டாட உத்தரவிட்டார். அதன்படி, பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கலைத்திருவிழா கடந்த மாதம், 16ம் தேதி துவங்கி நடைபெற்றன.
மொத்தம், 32 போட்டிகள் நடைபெற்றன. அதில், 610 மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.
பல கல்லுாரிகளில் இருந்து நடுவர்கள் பங்கேற்று முதல், மூன்று இடங்களுக்கான மாணவர்களை தேர்வு செய்தனர். இறுதி நிகழ்ச்சியாக புதையல் வேட்டை நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது.
கல்லுாரி முதல்வர் சுமதி மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். இதுபோன்ற விழாக்கள் மாணவ, மாணவியரின் அறிவாற்றல், சிந்தனைத்திறன் மற்றும் படைப்பாற்றல்களை மேம்படுத்த ஏதுவாக இருக்கும், என கல்லுாரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
வால்பாறை வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இந்த கல்வி ஆண்டு முதல் 'கல்லுாரி கலைத்திருவிழா' துவங்கப்பட்டுள்ளது.
கலைத்திருவிழாவில், கவிதைப்போட்டி, சிறுகதை, பேச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. விழாவில், நேற்று மாணவ, மாணவியரின் பல்வேறு சைகை நடனம், குழு நடனம், தற்காப்பு கலை போட்டிகள் நடைபெற்றது.
விழாவில், பழைய வால்பாறை அக் ஷரா வித்யாலயா ஆரம்ப பள்ளி முதல்வர் ஷில்பா, பொள்ளாச்சி அரசு கல்லுாரி உதவிபேராசிரியர் தமிழ்செல்வி, அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் இளங்கோ ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
கலைத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளர்கள் (போராசிரியர்கள்) கோவிந்தராஜ், ரூபா, பிரியதர்ஷினி ஆகியோர் செய்திருந்தனர்.
கல்லுாரி முதல்வர் ஜோதிமணி கூறியதாவது:
தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறை சார்பில் கல்லுாரி கலைத்திருவிழா கடந்த மாதம் 16ம் தேதி முதல் துவங்கி தொடர்ந்து நடைபெற்றது. இன்றும், நாளையும் கலைத்திருவிழா நடக்கிறது.
கல்லுாரி அளவில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்து நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிகளிலும், மாநில அளவிலான போட்டிகளிலும் கலந்து கொள்வார்கள். வெற்றி பெறும் மாணவர்களுக்கு, விழா நிறைவு நாளில் பரிசுகள் வழங்கப்படும். இவ்வாறு, கூறினார்.