/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பேட்டரி டெஸ்ட்' வாயிலாக மாணவர்கள் தேர்வு முடக்கம்; 4 ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு இல்லை
/
'பேட்டரி டெஸ்ட்' வாயிலாக மாணவர்கள் தேர்வு முடக்கம்; 4 ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு இல்லை
'பேட்டரி டெஸ்ட்' வாயிலாக மாணவர்கள் தேர்வு முடக்கம்; 4 ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு இல்லை
'பேட்டரி டெஸ்ட்' வாயிலாக மாணவர்கள் தேர்வு முடக்கம்; 4 ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு இல்லை
ADDED : அக் 10, 2025 12:19 AM
பொள்ளாச்சி; அரசு பள்ளிகளில், உலகத் திறனாய்வு தேர்வு வாயிலாக மாணவர்களை தேர்வு செய்ய நடத்தப்படும் மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகள், நான்கு ஆண்டுகளாக முடங்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், 6, 7 மற்றும் 8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியரின் விளையாட்டு திறன்களை கண்டறியும் பொருட்டு, 'பேட்டரி டெஸ்ட்' எனும் உலகத் திறனாய்வு தேர்வு விளையாட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
அதில், மாணவர்களின் உயரம், உடல் எடை, வேகம், நிலைப்புத் தன்மை, வலிமை, நீண்டநேரம் சக்தியை செலவிடுதல், உடலியக்க மாறுபாடு ஆகியவற்றின் கீழ், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 100, 200, 800, மற்றும் 1,500 மீ., ஓட்டம் ஆகிய போட்டிகள் நடத்தப்படுகிறது.
இதற்காக, பள்ளிகளில் பதிவேடும் பராமரிக்கப்படுகிறது. அவ்வகையில், அந்தந்த மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாயிலாக, ஒவ்வொரு வகுப்பிலும் சிறந்து விளங்கும் 4 மாணவர்கள், 4 மாணவியர் தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு, மாவட்ட அளவில் போட்டி நடத்தி, முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெறுவோருக்கு பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
குறிப்பாக, மண்டல போட்டி நடத்தி, ஒவ்வொரு போட்டியிலும் தலா, 10 பேர் தேர்வு செய்யப்பட்டு, மாதம், 500 ரூபாய் வீதம், ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக, அரசு விளையாட்டு விடுதிகளில் சேர முன்னுரிமையும் அளிக்கப்படுகிறது.
இப்போட்டிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக, நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் முடங்கியுள்ளது. இதனால், விளையாட்டு ஆர்வம் இருந்தும், மாவட்ட, மண்டல அளவில் திறமையை வெளிப்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.
இது குறித்து உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது:
தற்போது, பள்ளிகளில் வழக்கம்போல, 'பேட்டரி டெஸ்ட்' நடத்தி, பதிவேடு பராமரிக்கப்படுகிறது. அதேநேரம், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், மாவட்ட மற்றும் மண்டல போட்டிகள் நடத்துவதில்லை.
நான்கு ஆண்டுகளாக போட்டிகள் நடத்தப்படாததால், விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களைக் கண்டறிவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அரசு விளையாட்டு விடுதியில் சேர்ந்து, சலுகைகளை பெற முடியாமல் மாணவர்கள் பலர் பாதிப்படைகின்றனர். இதுகுறித்து, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும் தீர்வு காணப்படாமல் உள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.