/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளலுார் கிடங்கில் தீயை அணைக்க 6 ஏக்கரில் செயற்கை குட்டை உருவாக்கம்
/
வெள்ளலுார் கிடங்கில் தீயை அணைக்க 6 ஏக்கரில் செயற்கை குட்டை உருவாக்கம்
வெள்ளலுார் கிடங்கில் தீயை அணைக்க 6 ஏக்கரில் செயற்கை குட்டை உருவாக்கம்
வெள்ளலுார் கிடங்கில் தீயை அணைக்க 6 ஏக்கரில் செயற்கை குட்டை உருவாக்கம்
ADDED : மார் 29, 2025 11:32 PM

கோவை: வெள்ளலுார் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டால் அணைப்பதற்கு, சுத்திகரித்த கழிவு நீரை சேமித்து வைக்க, 6 ஏக்கரில் செயற்கை குட்டை உருவாக்கப்பட்டிருக்கிறது.
கோவை மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பை, வெள்ளலுார் கழிவு நீர் பண்ணை வளாகத்தில், 150 ஏக்கர் பரப்பளவில் கொட்டப்படுகிறது. கடுமையான வெப்பத் தாக்கத்தால், கடந்தாண்டு ஏப்., 6 முதல், 17 வரை மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது.
தீயை அணைக்கும் பணியில், 1,400 பேர் ஈடுபட்டனர். தண்ணீர் பீய்ச்சி அடிக்க தனியார் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. 11 மோட்டார்கள் தருவிக்கப்பட்டு, தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இடைவெளி இல்லாமல் மலைக்குன்றுகளாக குப்பை கொட்டப்பட்டு இருந்ததால், வாகனங்களில் சென்று தீயை அணைக்க, ரொம்பவே சிரமப்பட்டனர்.
இனி தீ விபத்து ஏற்பட்டால், அதுபோன்ற சிரமம் ஏற்படக் கூடாது என்பதற்காக, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கண்காணிப்பு கோபுரம் கட்டப்பட்டு இருக்கிறது.
தண்ணீர் பாய்ச்சுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உக்கடம் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சுத்திகரித்த நீரை 'பம்ப்' செய்து, வெள்ளலுாரில் தேக்க 6 ஏக்கர் பரப்பளவில் செயற்கை குட்டை ஏற்படுத்தப்படுகிறது.
கழிவு நீர் நிலத்துக்குள் இறங்காத வகையில், தார்பாலின் ஷீட் விரிக்கப்பட உள்ளது. இங்கு, 13 கோடி லிட்டர் தண்ணீர் தேக்க முடியும். அருகாமையில், 13 ஏக்கரில் மேலும் ஒரு குட்டை தயார் செய்ய ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இங்கு தேக்கும் தண்ணீரை, குப்பை கிடங்கில் வளர்க்கப்படும் மரக்கன்றுகள், குப்பையில் உரம் தயாரிக்கும் மையம் மற்றும் தீத்தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
இப்பணியை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு செய்தார். நிர்வாக பொறியாளர் இளங்கோவன், உதவி நிர்வாக பொறியாளர் கனகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.