ADDED : மார் 22, 2026 04:55 PM
வால்பாறை: அசாமில் நடைபெறும் சட்ட சபை தேர்தலில் ஓட்டுப்போட தொழிலாளர்கள் சென்றதால், வால்பாறையில் தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில், ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதனையடுத்து, தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்நிலையில் வால்பாறை மலைப்பகுதியில் உள்ள பல்வேறு தேயிலை தோட்டங்களில் அசாம் மாநிலத்தைச்சேர்ந்த, தொழிலாளர்கள் அதிக அளவில் பணிபுரிகின்றனர்.
அசாம் மாநிலத்தில் ஏப்ரல், 9ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதனால் சட்ட சபை தேர்தலில் வாக்களிக்கும் வகையில், அசாம் மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு ரயில் வாயிலாக புறப்பட்டுச்செல்கின்றனர்.
இது குறித்து, எஸ்டேட் அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறையில் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க, வெளிமாநிலத்தைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அசாம், மேற்கு வங்கம் மாநிலத்தில் சட்ட சபை தேர்தல் நடப்பதால், அம்மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தேர்தலில் வாக்களிக்க சென்றுள்ளனர். இவர்கள் இனி தேர்தல் முடிவு தெரிந்த பின் தான், மீண்டும் வால்பாறைக்கு வருவார்கள்.
இதனால், தேயிலை எஸ்டேட்களில் மீண்டும் தொழிலாளர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இவ்வாறு கூறினர்.
