ADDED : மார் 04, 2026 06:16 AM
சட்டசபை தேர்தலில் எந்த விதமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, மாநகர போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. அறிவிப்பு வெளியான பின், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும். போலீசாரை உள்ளடக்கி தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்பு உள்ளிட்டவை அமைக்கப்படும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின், போலீசார் எந்த விதமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருப்பூர் ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நடந்தது. கமிஷனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வடக்கு துணை கமிஷனர் பிரவீன் கவுதம், தெற்கு துணை கமிஷனர் தீபா சத்யன், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என, மாநகரில் உள்ள அனைத்து ஸ்டேஷன்களை சேர்ந்த போலீசாரும் பங்கேற்றனர்.
அதில் , தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின், போலீசாரின் பணிகள், எந்த விதமாக வேலை செய்ய வேண்டும், மற்ற துறைகளுடன் இணைந்து வேலை செய்வது, தேர்தல் நாள், அதற்கு முந்தைய நாளில் போலீசாரின் பணிகள், வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் அரசியல் கட்சிகளை அணுகுவது, ஓட்டுப்பதிவு மையத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் போலீசார் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு என, அனைத்தையும் கமிஷனர் எடுத்துரைத்து, பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
- நமது நிருபர் -:
