/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருதமலையில் முருகன் சிலை; சட்டசபை மதிப்பீட்டு குழு ஆய்வு
/
மருதமலையில் முருகன் சிலை; சட்டசபை மதிப்பீட்டு குழு ஆய்வு
மருதமலையில் முருகன் சிலை; சட்டசபை மதிப்பீட்டு குழு ஆய்வு
மருதமலையில் முருகன் சிலை; சட்டசபை மதிப்பீட்டு குழு ஆய்வு
ADDED : ஜூலை 17, 2025 10:31 PM

தொண்டாமுத்தூர்; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 184 அடி உயர முருகன் சிலை அமைக்கும் பணி குறித்து, சட்டசபை மதிப்பீட்டு குழு ஆய்வு செய்தனர்.
தமிழக சட்டசபை மதிப்பீட்டு குழு, நேற்று கோவையில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரத்தில் அமைய உள்ள, 184 அடி உயர முருகன் சிலை குறித்தும், அதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தனர். அப்போது, சிலை அமைவிடம் குறித்து, முதல்வர் இறுதி முடிவெடுக்க உள்ளார்.
தற்போது, அதற்கான முன்னோட்ட பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முருகன் சிலை மற்றும் அதனுடன், 8 ஏக்கரில் பல்வேறு வசதிகளுடன் உலகத்தரத்திலான ஆன்மிக சுற்றுலா மையம் ஏற்படுத்தப்பட உள்ளது.
இதில், 3 ஏக்கர் நிலம் அறநிலையத்துறை கைவசம் உள்ளதாகவும், மீதமுள்ள, 5 ஏக்கர் நிலம், வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை மற்றும் இதர அரசு துறையிடம் உள்ளதாகவும், அவ்விடத்தை பெற, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டிருப்பதாகவும், அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல, பாரதியார் பல்கலை.,க்கு சொந்தமான, 8 ஏக்கர் நிலத்தை, குத்தகை அடிப்படையில் பெற்று, நவீன பஸ் ஸ்டாண்டு, மருத்துவமனை, போலீஸ் ஸ்டேஷன், தீயணைப்பு நிலையம் என, பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, மலை மீது அமைக்கப்பட்டு வரும் லிப்ட் பணிகள் குறித்தும் கேட்டறிந்து, அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் ஆய்வு குழுவினர் எடுத்துரைத்தனர்.
அதன்பின், கோவிலில் சுவாமி தரிசனம் செய்தபின், மாநகருக்கு புறப்பட்டு சென்றனர். ஆய்வின்போது, சட்டசபை செயலர் சீனிவாசன், கலெக்டர், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் துணை கமிஷனர் செந்தில்குமார், மருதமலை கோவில் தக்கார் ஜெயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

