ADDED : மார் 25, 2026 09:57 PM

பெ.நா.பாளையம்: 'அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன' என, விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
சட்டசபை தேர்தல் முன்னிட்டு, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், 'விவசாயிகளின் நலன் கருதி அத்திக்கடவு அவிநாசி திட்டம் பேஸ் 2 செயல்படுத்தப்படும்' என்பன தரிசு நில மேம்பாடு திட்டம், தனி இயக்கமாக செயல்படும்' என்பன உட்பட விவசாயம் சார்ந்து அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள், விவசாயிகளிடையே வரவேற்பு பெற்றுள்ளது.
வேலுசாமி, மத்தம்பாளையம்:
அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அத்திக்கடவு அவிநாசி 2வது திட்டம், 100 சதவீதம் மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் மோட்டார் பம்ப்செட், பாம்பு கடித்து, வனவிலங்குகள் தாக்கி உயிர் இழக்கும் விவசாயிகளுக்கு, ரூ.10 லட்சம் நஷ்டஈடு உள்ளிட்டவை, விவசாயிகளால் பெரிதும் வரவேற்கப்படும் திட்டங்கள்.
தேவராஜ், குறிஞ்சி உழவர் மன்ற செயலாளர், முத்துக்கல்லுார், காரமடை:
கரும்பு விலை உயர்வு, பயிர் கடன் தள்ளுபடி, இடி மின்னல் தாக்கி உயிரிழக்கும் விவசாயிகளுக்கு, 10 லட்சம் ரூபாய் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
இது, எல்லா விவசாயிகளும் பயன்பெற முடியாது. ஆனால், விவசாயிகளின் உப தொழிலாக இருக்கும் பால் விலை குறித்து எந்த தகவலும் இல்லை. பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வரும் கள்ளுக்கடை திறப்பு குறித்து ஒன்றுமில்லை.
சஞ்சய், விவசாயி, காரமடை :
கரும்பு விலை டன்னுக்கு, 4,500 ரூபாய், கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் தள்ளுபடி, விவசாய விளைப்பொருட்களை கூட்டுறவு சங்கங்களே கொள்முதல் செய்வது, பயிர்கள் காப்பீடு திட்டம், சேமிப்பு கிடங்கு அமைத்தல், மருந்து அடிக்க ட்ரோன் வழங்குதல், தரிசு நில மேம்பாட்டு திட்டம் உட்பட ஏராளமான அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
இவை அனைத்தும் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் இருக்கும். கல்வி கடன் தள்ளுபடி அறிவிப்பு, விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.
கணேசன், ராவத்துார்:
சிறு, குறு, விவசாயிகளுக்கு உரம், விதைகள் உட்பட இடுபொருட்கள் வாங்க உற்பத்தி மானியமாக ஆண்டுக்கு, எக்டர் ஒன்றுக்கு, 15 ஆயிரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு, விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
சிறு, குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து விவசாய உற்பத்தியாளர் குழுக்கள், நிறுவனங்கள் அமைப்பதை ஊக்குவிக்கப்படும் என்றும், அதற்கு உரிய நிதி ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குழுக்களின் உற்பத்தி பொருட்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.
சுபசேகரன், பெரிய வயல் தோட்டம், வடக்கலுார்:
நீர்நிலைகளுக்கு பாதிப்பு இல்லாமல், விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்படும் என்கிற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. கரும்புக்கு குறைந்தபட்சம் ஒரு டன் 4,500 ரூபாய், நெல்லுக்கு ஒரு குவின்டாலுக்கு 3,500 ரூபாயும் வழங்கப்படும். தரிசு நிலங்களில் விவசாய காடுகள் வளர்ப்பு ஊக்குவிக்கப்படும்.
வேளாண் பயிர்களுக்கு காப்பீடு தொகை ஐந்து சதவீதம் செலுத்த வேண்டி உள்ளது. இதில் மூன்று சதவீதத்தை அரசே செலுத்தும். விவசாயிகள் இரண்டு சதவீதம் செலுத்தினால் போதும் என்பன போன்ற அறிவிப்புகள் மகிழ்ச்சி தருகிறது.
சுந்தரம், கோவில் தோட்டம், அன்னுார்:
விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாகஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
குறைந்தபட்ச விலைக்கு குறைவாக, சந்தை நிலவரம் இருந்தால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச விலையிலேயே கூட்டுறவு சங்கங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகங்கள் கொள்முதல் வழியாக கொள்முதல் செய்யப்படும்.
உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு ஜி.எஸ்.டி., வரி விலக்கு அளிக்கப்படும் ஆகிய அறிவிப்புகள் மகிழ்ச்சி தருகிறது.
