அத்திக்கடவு திட்ட கூட்டமைப்பினர் பா.ஜ., வேட்பாளருக்காக பிரசாரம்
அத்திக்கடவு திட்ட கூட்டமைப்பினர் பா.ஜ., வேட்பாளருக்காக பிரசாரம்
ADDED : ஏப் 13, 2026 09:37 PM

அன்னுார்: அவிநாசி தொகுதி பா.ஜ., வேட்பாளருக்காக, அத்திக்கடவு கூட்டமைப்பினர் ஓட்டு சேகரித்தனர்.
அத்திக்கடவு -- அவிநாசி திட்ட கூட்டமைப்பினர், கடந்த வாரம் கதவுகரையில் கலந்துரையாடல் நடத்தினர். இதில் பங்கேற்ற மத்திய இணையமைச்சரும், அவிநாசி தொகுதி பா.ஜ., வேட்பாளருமான முருகன், 'அத்திக்கடவு முதல் திட்டம் மேம்படுத்தப்படும். விடுபட்ட குளம், குட்டைகளுக்கான இரண்டாவது திட்டம் செயல்படுத்தப்படும். பாண்டியாறு பவானி நதி இணைப்பு திட்டம் மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்' என உறுதியளித்தார். இதையடுத்து, கூட்டமைப்பு சார்பில் பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவு திரட்ட முடிவு செய்யப்பட்டது.
அத்திக்கடவு -- அவிநாசி திட்ட கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கணேசன், நிர்வாகி நடராஜன் ஆகியோர் வடவள்ளி மற்றும் குப்பேபாளையம் ஊராட்சிகளில், நேற்று பா.ஜ., வேட்பாளர் முருகனுக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தனர்.
கூட்டமைப்பு நிர்வாகிகள் பிரசாரத்தில் பேசியதாவது :
அ.தி.மு.க., ஆட்சியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்ட இரண்டாவது திட்டம், கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அத்திக்கடவு அவிநாசி இரண்டாவது திட்டம் மற்றும் பாண்டியாறு பில்லுார் அணை இணைப்பு ஆகிய திட்டங்கள் நிறைவேற, மத்திய அரசிடம் அணுகி நிதி பெறவும், மாநில அரசு நிதியிலிருந்து செயல்படுத்தவும் அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியே சரியானது.
இவ்வாறு, அவர்கள் பேசினர்.
