/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
14 மாதங்களுக்குப் பிறகு அன்னுார் குளத்திற்கு வந்த அத்திக்கடவு நீர்
/
14 மாதங்களுக்குப் பிறகு அன்னுார் குளத்திற்கு வந்த அத்திக்கடவு நீர்
14 மாதங்களுக்குப் பிறகு அன்னுார் குளத்திற்கு வந்த அத்திக்கடவு நீர்
14 மாதங்களுக்குப் பிறகு அன்னுார் குளத்திற்கு வந்த அத்திக்கடவு நீர்
ADDED : ஜூலை 08, 2025 12:06 AM

அன்னுார்; அன்னுார் குளத்திற்கு 14 மாதங்களுக்கு பிறகு அத்திக்கடவு நீர் நேற்று வந்தது.
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் 1,045 குளம், குட்டைகளுக்கு அத்திக்கடவு நீர் விடப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், அன்னுாரில் உள்ள 119 ஏக்கர் குளத்தில், அத்திக்கடவு நீர் 40க்கும் மேற்பட்ட முறை விடப்பட்டது. குளத்தில் 60 சதவீதம் நீர் நிரம்பியது.
இந்நிலையில் குளத்தை ஒட்டி உள்ள தர்மர் கோவில் வீதி, புவனேஸ்வரி நகர், பழனி கிருஷ்ணா அவென்யூ பகுதிகளில் தரையில் நீர் ஊறத் தொடங்கியது. வீடுகள், தோட்டங்கள் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து, பேரூராட்சி சார்பில், கடந்த ஆண்டு அத்திக்கடவு திட்ட அதிகாரிகளிடம்,' தற்காலிகமாக அன்னுார் குளத்திற்கு அத்திக்கடவு நீர் விட வேண்டாம்,' என கோரிக்கை விடப்பட்டது.
அதன்பேரில் அன்னுார் வட்டாரத்தில் மற்ற குளங்களுக்கு தண்ணீர் விடப்பட்டது. 14 மாதமாக அன்னுார் குளத்திற்கு தண்ணீர் விடப்படாமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று மதியம் அன்னுார் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள 119 ஏக்கர் குளத்திற்கு அத்திக்கடவு நீர் வந்தது. மூன்று மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து வந்தது. விவசாயிகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து, அத்திக்கடவு நீர் வருவதை பார்த்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'அன்னுார் குளத்தில் நீர் நிரம்பினால், சுற்றுவட்டாரத்தில் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
விவசாயத்திற்கும், கால்நடை வளர்ப்புக்கும் உதவியாக இருக்கும். அத்திக்கடவு நீர் 14 மாதங்களுக்கு பிறகு வந்தது மகிழ்ச்சி தருகிறது,' என்றனர்.