/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சோலையாறு அணையில் ஏ.டி.எம்., மையம் தேவை
/
சோலையாறு அணையில் ஏ.டி.எம்., மையம் தேவை
ADDED : மே 12, 2025 11:11 PM
வால்பாறை, ;சோலையாறு அணையில், ஏ.டி.எம்., மையம் அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக, கேரள எல்லையில் அமைந்துள்ளது வால்பாறை. இங்கு இருமாநில மக்கள் பயன்பெறும் வகையில், அரசு மற்றும் தனியார் பஸ்கள் வால்பாறை, மளுக்கப்பாறை, அதிரப்பள்ளி வழியாக சாலக்குடி வரை இயக்கப்படுகிறது.
கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள சோலையாறு அணை, வால்பாறை நகரில் இருந்து, 23 கி.மீ., தொலைவில் உள்ளது. சோலையாறு அணை பகுதியை சுற்றி முருகாளி, ேஷக்கல்முடி, புதுக்காடு, கல்யாணப்பந்தல், பன்னிமேடு, சேடல்டேம், இடதுகரை உள்ளிட்ட பகுதிகளில், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
மேலும், தமிழக, கேரள எல்லையில் உள்ள சோலையாறு அணை பகுதிக்கு சுற்றுலா பயணியரும் அதிகம் வருகின்றனர். இந்நிலையில், இங்கு, ஏ.டி.எம்., மையம் இல்லாததால், வால்பாறை நகருக்கு தான் மக்கள் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மக்கள் கூறுகையில், 'சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும், சோலையாறு அணைப்பகுதியில் வங்கிகள் சார்பில் ஏ.டி.எம்., மையம் திறக்க வேண்டும், என, 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.
அருகில், கேரள மளுக்கப்பாறை எஸ்டேட் அமைந்துள்ளதால் அப்பகுதி மக்களும், சோலையாறு அணை பகுதியை சுற்றியுள்ள தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில் ஏ.டி.எம். மையம் திறக்க வேண்டும்,' என்றனர்.