/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வகுப்பறையில் கவனம்; நல்ல மதிப்பெண்ணுக்கு அச்சாரம்
/
வகுப்பறையில் கவனம்; நல்ல மதிப்பெண்ணுக்கு அச்சாரம்
ADDED : அக் 08, 2024 11:33 PM

பெரும்பாலான மாணவர்களுக்கு பிரச்னை, வகுப்பறையில் கவனமாக இல்லாமல் இருப்பது தான். எவ்வளவுதான் ஆசிரியர் நடத்துவதை கவனிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், சிறிது நேரம்கூட தாக்குப்பிடிக்க முடியாது. நண்பர்களுடன் பேசுவது, வெளியே வேடிக்கை பார்ப்பது, துாக்கம் என, பல்வேறு வகையில் கவனம் சிதறி விடும்.
கவனத்தை சிதறவிடாமல் இருக்க சில 'டிப்ஸ்'கள்:
ஆசிரியர்களுடன் 'ஐ காண்டாக்ட்'
ஒரு ஆசிரியர் பாடம் குறித்து விரிவாக எடுத்துரைக்கும்போது, தங்களை கவனிக்கும் மாணவர்களிடமே அவர்களுடைய கவனமும் இருக்கும். வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மாணவர்களிடம் ஆசிரியர்களின் கவனம் செல்லாது. முன்வரிசையில் அமரும்போது ஆசிரியர்களுடன் 'ஐ காண்டாக்ட்' மேம்படும். ஆசிரியர்களும் மாணவர்கள் அதிக கவனத்துடன் கவனிக்கும் போதுதான் அந்தப் பாடம் தொடர்பான அதிக தகவல்களை பகிர்ந்து கொள்வார்கள்.
குறிப்புகள் எடுத்தல்
ஆசிரியர் பாடம் நடத்தும் போது, அந்த தலைப்பு குறித்த முக்கிய குறிப்புகளை சொல்லவும் செய்வார்கள், போர்டிலும் எழுதுவார்கள். அவற்றை மாணவர்கள் கவனமாக குறிப்பெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் போது, கவனமும் சிதறாது, பின்னர் படிக்கும் போதும், அந்த தலைப்பு பற்றி ரீ-கால் செய்து கொள்வதற்கும் உதவியாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் வகுப்புத் தேர்வுக்கோ அல்லது ஆண்டுத் தேர்வுக்கோ தயாராகும் போது, அந்த குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சந்தேகம் கேட்பது
மாணவர்களுக்கு, அந்தந்த வகுப்புகளில் நடத்தப்படும் பாடங்கள் அனைத்தும் புதியதாகத் தான் இருக்கும். ஒரு முறை சொன்னால் அனைத்தும் புரிந்துவிடும் என்பது சாத்தியமில்லாத ஒன்று.
ஆசிரியர் பாடம் நடத்தும் போது முதலில் கவனிக்க வேண்டும். அப்போதுதான் அதுகுறித்த சந்தேகம் வரும். அந்தப்பாடமும் முழுமையாக புரியும். ஆசிரியருக்கும் மேலும் அப்பாடத்தை விளக்கிக்கூற ஆர்வம் வரும். அவ்வப்போது கேட்கப்படும் சந்தேகங்களையும் அதற்கான விளக்கத்தையும் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும்.
நல்ல அபிப்ராயம்
ஆசிரியர்களிடம் நல்ல மாணவர் என்ற அபிப்ராயத்தைப் பெற வேண்டும். அதற்கு வகுப்பை நன்கு கவனிக்க வேண்டும். சந்தேகங்களை கேட்க வேண்டும். சரியான நேரத்தில் வீட்டுப் பாடங்களை சமர்ப்பித்தல், அதிக விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருதல் போன்ற செயல்களை தொடர்ச்சியாக செய்தால், படிப்புக்கு இந்த மாணவர் முக்கியத்துவம் தருகிறார் என்று, ஆசிரியர்களிடம் ஒரு நல்ல அபிப்ராயம் ஏற்படும்.
ரிவிஷன்
ஆசிரியர் நடத்தும் பாடங்களை, வகுப்பில் எவ்வளவு நன்றாக கவனித்தாலும், அது 24 மணி நேரத்திற்குள் மறந்துவிடும். அதனால், வகுப்பில் எடுத்த குறிப்புகளை வைத்து பாடங்களை வீட்டில் படிக்க வேண்டும். இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொண்டால், 80 சதவீத பாடங்கள் மனதில் பதிந்துவிடும். தேர்வு சமயத்தில் கஷ்டப்பட்டு படிக்க வேண்டிய அவசியமே இருக்காது. எளிதாக படித்து தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும்.