/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஏ.பி., நீர் திருட்டை தடுக்க அதிகாரிகள் ஒருங்கிணைப்பில்லை! போலீஸ், வருவாய் துறையினர் வருவதில்லை என புகார்
/
பி.ஏ.பி., நீர் திருட்டை தடுக்க அதிகாரிகள் ஒருங்கிணைப்பில்லை! போலீஸ், வருவாய் துறையினர் வருவதில்லை என புகார்
பி.ஏ.பி., நீர் திருட்டை தடுக்க அதிகாரிகள் ஒருங்கிணைப்பில்லை! போலீஸ், வருவாய் துறையினர் வருவதில்லை என புகார்
பி.ஏ.பி., நீர் திருட்டை தடுக்க அதிகாரிகள் ஒருங்கிணைப்பில்லை! போலீஸ், வருவாய் துறையினர் வருவதில்லை என புகார்
ADDED : ஏப் 29, 2025 09:13 PM

பொள்ளாச்சி; 'பாசன நீர் திருட்டை தடுக்க கண்காணிப்பு குழுவில், போலீசார், வருவாய்துறை அதிகாரிகளும் இணைந்து பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
பொள்ளாச்சி சப் -கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. சப்-கலெக்டர் (பொ) விஸ்வநாதன் தலைமை வகித்தார். திருமூர்த்தி திட்டக்குழு தலைவர் பரமசிவம், ஆழியாறு திட்டக்குழு தலைவர் செந்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் மணிகண்டன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
விவசாயிகள் பேசியதாவது:
பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்துக்கு தற்போது தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. அதில், தண்ணீர் திருட்டை தடுக்க நீர்வளத்துறை அதிகாரிகள் மட்டும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசார், வருவாய்துறை அதிகாரிகள் வருவதில்லை. இதனால், கண்காணிப்பு பணிகள் தொய்வு ஏற்படும் சூழல் உள்ளது. போலீசார், வருவாய்துறை அதிகாரிகள் இணைந்து பணிகளை மேற்கொள்ளும் போது தண்ணீர் திருடுவோருக்கு அச்சம் ஏற்படும்; திருட்டும் கட்டுப்படும். அதனால், போலீசார், வருவாய்துறையும் இணைந்து பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
காண்டூர் கால்வாய் பகுதியில் மலையேற்றம் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளதால் அங்கு யாரையும் அனுமதிக்க கூடாது.
அங்கலகுறிச்சி கால்வாய் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
கால்வாய் அருகே 'காயர் பித்' கொட்டுவதை தடுக்க வேண்டும். கால்வாயில் இருந்து குறிப்பிட்ட துாரம் கடந்து, 'காயர் பித்' கொட்டி உலர்த்தும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். காயர் பித்தால் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க வேண்டும்.பசுமை தீர்ப்பாயம், மத்திய சுற்றுச்சூழல் வாரிய உத்தரவை அமல்படுத்த வேண்டும்.
பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில், கோட்டூர் ரோட்டிலும், கோட்டூர் சுற்றியுள்ள பகுதிகளிலும், தென்னை நார் கழிவுகளை எடுத்துச் செல்லும் வாகனங்கள் பதிவு எண் இல்லாமல் இயங்குகின்றன. இரவு நேரங்களில் எவ்வித ரிப்ளெக்டர் இல்லாமலும் இயங்குகின்றன. இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காபுலிபாளையம் தடுப்பனை பல ஆண்டுக்கு முன் கட்டபட்டு, பாசன வசதியும் உள்ளது. ஆனால், இங்குள்ள சிலர் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சுவதால் இதன் நோக்கம் பாதிக்கப்படுகிறது. ஆர்.பொன்னாபுரம் - வடக்கிப்பாளையம் ரோட்டில் அதிகளவு வளர்ந்துள்ள புதரை அகற்ற வேண்டும்.
நெல்லில் பூஞ்சான நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லாததால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் நெல் விலை குறைவாக உள்ளது. இதற்குரிய நடவடிக்கை எடுக்கனும். நெல் குவிண்டாலுக்கு, 3,500 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
யூரியா, டி.ஏ.பி., உரங்கள் உரிய நேரத்துக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கதிர் அறுக்கும் இயந்திரம் உரிய நேரத்தில் வழங்க வேண்டும். காரப்பட்டி கால்வாயை துார்வாரவும், மண்ணை அகற்றவும் நடவடிக்கை எடுத்து, காரப்பட்டி ரோட்டை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு, பேசினர்.
சப் - கலெக்டர் (பொ) பேசுகையில், ''விவசாயிகளின் பிரச்னைகள், கோரிக்கைள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும்,'' என்றார்.