/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளாஸ்டிக் பயன்படுத்தாத ஹோட்டல்களுக்கு விருது
/
பிளாஸ்டிக் பயன்படுத்தாத ஹோட்டல்களுக்கு விருது
ADDED : ஆக 03, 2025 12:20 AM
கோவை: மாநில அரசால் தடைசெய்யப்பட்ட. ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., அமைப்பால் அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் பயன்படுத்தாமல், மக்கும் தன்மையுள்ள பொருட்களை மட்டும் பயன்படுத்தும் ஹோட்டல்களுக்கு, ரொக்கப்பரிசு, விருது வழங்கப்படவுள்ளது.
பெரிய வகை உணவகங்கள் அதாவது, விற்றுக்கொள்முதல் 12 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பிரிவில் உள்ள உணவு வணிகர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசுடன் விருதும், சாலையோர சிறு வணிகர்களுக்கு, ரூ.50 ஆயிரத்துடன் விருதும் வழங்கி கவுரவிக்கப்படவுள்ளது.
விண்ணப்பதாரர் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு அல்லது உரிமம் நடப்பில் இருக்க வேண்டும். உணவகத்தில் குறைந்தபட்சம் ஒரு நபர் உணவு பாதுகாப்பு பயிற்சி பெற்றும், அனைத்து பணியாளர்களுக்கும் மருத்துவ சான்று பெற்றிருப்பது அவசியம்.
தகுதியுள்ள உணவகங்கள் விண்ணப்பங்களை, ரேஸ்கோர்ஸ் சாலையில், மாவட்ட சுகாதாரத்துறை அலுவலக வளாகத்தில் உள்ள, உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவினர் பரிசீலனை செய்து, மூன்றாம் நபர் தணிக்கை நிறுவனம் வாயிலாக, உணவகத்தில் களஆய்வு செய்து, கூட்டாய்வுக்குழு உணவு பாதுகாப்புத்துறை கமிஷனருக்கு சமர்ப்பிக்கவுள்ளனர். மாவட்டத்திற்கு தலா ஒரு பெரிய உணவகத்தையும், ஒரு சிறு உணவகத்தையும் தேர்வு செய்து சிறந்த உணவகங்களாக தேர்வு செய்து, விருது வழங்கப்படவுள்ளது.