/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளாஸ்டிக் குறைக்கும் ஹோட்டல்களுக்கு விருது!
/
பிளாஸ்டிக் குறைக்கும் ஹோட்டல்களுக்கு விருது!
ADDED : ஜூலை 27, 2025 11:12 PM
கோவை; மாநில அளவில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில், சுற்றுச்சூழல்களுக்கு கேடு விளைவிக்காத பொருட்களை பயன்படுத்தும் ஹோட்டல்களுக்கு, விருது வழங்கப்பட உள்ளது.
ஒரு முறை பயன்படும் பிளாஸ்டிக் தடை இருந்தும், மாற்று பொருட்கள் இன்மையால், இதன் பயன்பாடு குறைந்தபாடில்லை. இதற்கு தீர்வு காணும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் முற்றிலும் தவிர்த்து, சுற்றுச்சூழல்களுக்கு தீங்கு விளைவிக்காத, மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை கொண்டு, பார்சல் உள்ளிட்ட பிற பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்தும் ஹோட்டல்களுக்கு, விருது வழங்கப்படவுள்ளது.
மாநில அளவில் இதற்கான விண்ணப்பங்கள் பெறும் முதல்கட்ட பணிகள் துவங்கியுள்ளன. கோவை மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில், தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து விதிமுறைகளும் பின்பற்றியுள்ள ஹோட்டல்கள் மட்டுமே, இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலும்.
மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது:
உணவு பாதுகாப்புத்துறை சார்பில், சிறியது, பெரியது, நடுத்தரம் என்ற அடிப்படையில் ஹோட்டல்களின் தரம் பிரித்து, பட்டியல் தயாரித்து வருகிறோம்.
முதல்கட்டமாக, 150 ஹோட்டல் உரிமையாளர்களுக்கு வழிகாட்டுதல் கூட்டம் நடத்தி, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது, ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தவிர்த்து, மாற்று வழியை பயன்படுத்தும் ஹோட்டல்களுக்கு, விருது வழங்கப்பட உள்ளது.
கோவை மாவட்டத்தில் பெறப்படும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து தகுதியானவர்களை தேர்வு செய்ய கலெக்டர் தலைமையில், மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுகாதாரத்துறை உள்ளிட்ட பிரிவு அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள ஹோட்டல்கள் ஆக., 31ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்,'' என்றார்.

