/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஐ.ஐ.டி.,- எம்' ஆன்லைன் படிப்பு மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
'ஐ.ஐ.டி.,- எம்' ஆன்லைன் படிப்பு மாணவர்களுக்கு விழிப்புணர்வு
'ஐ.ஐ.டி.,- எம்' ஆன்லைன் படிப்பு மாணவர்களுக்கு விழிப்புணர்வு
'ஐ.ஐ.டி.,- எம்' ஆன்லைன் படிப்பு மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : பிப் 18, 2024 02:01 AM
கோவை:அனைவருக்கும் 'ஐ.ஐ.டி-எம்' திட்டத்தின் கீழ் வழங்கப்படும், ஆன்லைன் படிப்புகள் குறித்து, பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக, திட்ட தலைவர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாடு முழுக்க, 23 ஐ.ஐ.டி.,கள் (இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள்) உள்ளன. ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இங்கு படிக்கலாம். இத்தேர்வை ஆண்டுதோறும், 14 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
ஆனால், 16 ஆயிரம் சீட் மட்டுமே உள்ளது. தேர்வு எழுதும் மற்றவர்களுக்கும், வாய்ப்பளிக்க வேண்டுமென்ற நோக்கில், ஐ.ஐ.டி., மெட்ராஸ் சார்பில், 2021ல், இளங்கலை அறிவியல், நான்கு ஆண்டுகால ஆன்லைன் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதில், பிளஸ் 2 கல்வித்தகுதி கொண்ட யார் வேண்டுமானாலும் படிக்கலாம். பிளஸ் 1 முடித்த பள்ளி மாணவர்கள், இத்தேர்வு எழுத தகுதியுடையவர்கள். பிளஸ் 2 முடிக்கும் முன்பே, ரிசல்ட் வெளியாவதால், உயர்படிப்பில் சேருவது உறுதி செய்யப்படுகிறது.
இதுகுறித்து, அனைவருக்கும் 'ஐ.ஐ.டி-எம்' திட்ட தலைவர் ஹரிகிருஷ்ணன் கூறியதாவது:
இளங்கலை அறிவியல் ஆன்லைன் படிப்பில், தற்போது வரை, 22 ஆயிரத்து 400 பேர் சேர்ந்து படிக்கின்றனர். இப்படிப்பில் சேர, ஆண்டுதோறும் ஜன., மே, அக்., மாதங்களில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
பிளஸ் 2 முடித்த யார் வேண்டுமானாலும் சேர்ந்து படிக்கலாம். தினசரி இரண்டு மணி நேரம் ஆன்லைன் வகுப்பும், வாரந்தோறும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய, பேராசிரியர்களுடன் கலந்துரையாடும் வகுப்புகளும் நடத்தப்படும்.
இப்படிப்பு முடித்தவர்களுக்கு, ஐ.ஐ.டி., மெட்ராஸில் படித்ததற்கான ரெகுலர் சான்றிதழ் வழங்கப்படும்.
டேட்டா சயின்ஸ், ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸ், எலக்ட்ரானிக் சிஸ்டம் ஆகிய மூன்று படிப்புகள் வழங்கப்படுகின்றன; எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.
வரும் 2026ல், அரசு, தனியார் நிறுவனங்களில், 11.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்புள்ளதால், அதற்கு தகுதியுள்ளவர்களை தயார்ப்படுத்துவதே, இத்திட்டத்தின் நோக்கமாகும்.
'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், அனைவருக்கும் ஐ.ஐ.டி-எம் பற்றி, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, மாவட்ட கலெக்டர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தனியார் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இப்படிப்புகளில் சேர, கல்வி நிறுவனங்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.harikrishnan@study.iitm.ac.in என்ற இ-மெயில் முகவரி அல்லது, https://https://study.iitm.ac.in இணையதளத்தையும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.