ADDED : பிப் 05, 2026 05:02 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், வேளாண் மாணவியர் தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழக வேளாண் பல்கலையில், நான்காம் ஆண்டு பயிலும் மாணவியர், ஆழியாறு பகுதியில் தங்கி விவசாயிகளின் அனுபவங்களை கேட்டறிந்து செயல்முறை விளக்கம் அளித்து வருகின்றனர்.
அதில், தென்னையில் சாறு உறிஞ்சும் வெள்ளை ஈ, அஸ்வினி போன்ற பூச்சிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்த மஞ்சள் ஒட்டுப்பொறி பயன்பாடு குறித்து விளக்கப்பட்டது.
மஞ்சள் நிறத்தால் ஈர்க்கப்படும் பூச்சிகள், ஒட்டும் திரவம் பூசப்பட்ட பொறியில் சிக்கி அழிக்கப்படுவதால் பூச்சிகளின் எண்ணிக்கை குறைகிறது. இதனால், தென்னை இலைகளின் பச்சை தன்மை பாதுகாக்கப்பட்டு மகசூல் இழப்பு தடுக்கப்படுகிறது.
ஒரு ஏக்கருக்கு, 6 - 8 மஞ்சள் ஒட்டுப்பொறிகள், தென்னை மரத்தில் ஆறு அடி உயரத்துக்கு அமைக்க வேண்டும். இதில், 15 - 20 நாட்களுக்கு ஒரு முறை ஒட்டும் திரவத்தை புதுப்பித்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
எனவே, தென்னை விவசாயிகள் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறையின் ஒரு பகுதியாக, மஞ்சள் ஒட்டுப்பொறிகள் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், 'உழவன்' மொபைல் செயலினை பயன்படுத்தும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை துறைகள் வாயிலாக செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்த தகவல்களும், அனைத்து வகையான இடுபொருட்களை பெறுவதற்கு முன்பதிவு செய்வது குறித்தும் விளக்கம் அளித்தனர்.
