ADDED : ஏப் 15, 2026 04:52 AM
பொள்ளாச்சி: கோடையில் நீர் தட்டுப்பாடு காரணமாக, பசுந் தீவனத்துக்கு பற்றாக்குறை நிலவும். இந்நிலையில், கால்நடை வளர்ப்பில், அசோலா பாசி சாகுபடி பெரிய அளவில் கைகொடுக்கிறது.
அசோலாவில், உள்ள அனபீனா அசோலே என்ற பாசி அதிக புரதச்சத்து கொண்டது. ஆடு, மாடு, கோழிகளுக்கு பசுந்தீவனமாகவும், உலர்தீவனமாகவும் வழங்கலாம்.
அசோலாவில் புரதங்கள், அத்தியாவசிய அமினோ அமிலங்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி12, பீட்டா கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம் உள்ளிட்ட கனிமங்கள் உள்ளன. உலர்ந்த அசோலாவில், 25 - 35 சதவீத புரதம் உள்ளது. அதே சமயம் கார்போஹைட்ரேட் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் குறைவு.அதிக புரதச்சத்தும் குறைந்த லிக்னின் உள்ளடக்கமும், ஜீரணத்தை எளிதாக்குகின்றன. கோழிகளுக்கு அசோலாவைத் தீவனமாக அளிப்பதால், இறைச்சிக் கோழிகளின் எடை அதிகரிக்கிறது.
கோழிகள் கூடுதல் முட்டையிடுகின்றன. அசோலாவை ஆடுகள், பன்றி, முயல்களுக்கும் தீவனமாக அளிக்கலாம். சாகுபடி செய்வதும் எளிது.எந்த அளவு தேவைப்பட்டாலும், அதற்குத் தேவையான அளவில் சிமென்ட் தொட்டி, குளம் போன்ற அமைப்பை உருவாக்கி வளர்க்கலாம். கோடையில் தீவனப் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், ஆரோக்கியமான தீவனத்துக்கும் அசோலாவை வளர்க்கலாம் என, வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
