தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சீமை கருவேல மரங்களை அகற்ற 30 ம் தேதி வரை கெடு:ஊராட்சிகளில் பணிகள் தீவிரம்

சீமை கருவேல மரங்களை அகற்ற 30 ம் தேதி வரை கெடு:ஊராட்சிகளில் பணிகள் தீவிரம்

சீமை கருவேல மரங்களை அகற்ற 30 ம் தேதி வரை கெடு:ஊராட்சிகளில் பணிகள் தீவிரம்


UPDATED : செப் 07, 2026 10:50 PM

ADDED : செப் 07, 2026 09:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 07, 2026 10:50 PM ADDED : செப் 07, 2026 09:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலூர்: வரும், 30 ம்தேதிக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து சீமை கருவேல மரங்களையும் அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊராட்சிகளில், சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரமடைந்துள்ளது.

நிலத்தடி நீர்மட்டம் மற்றும் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, சுற்று சூழலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும், என, மதுரை உயர்நீதிமன்ற கிளையில், கடந்த, 2015 ல் வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து, 2017 ல் இதே கருத்தை வலியுறுத்தி அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மேலும் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதை விசாரித்த நீதிமன்றம், தமிழகம் முழுக்க, நீர்நிலைகள் அரசு மற்றும் தனியார் இடங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை உடனடியாக அகற்ற அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும், என, கடந்த, ஜூன் மாதம் 5 ம்தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து, ஊரக வளர்ச்சி துறை மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து, வரும், 30 ம் தேதிக்குள் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என, கலெக்டர் பவன்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தங்கள் ஒன்றியத்தில் உள்ள உதவி பொறியாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.

அதில், ஊராட்சிகளில் உள்ள நீர் நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு, தனியார் நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐந்து அங்குலம் சுற்றளவு உள்ள மரக்கட்டைகளை டன் ஒன்றுக்கு, குறைந்த பட்ச ஆரம்ப விலை, 4 ஆயிரம் ரூபாய்க்கும், ஐந்து அங்குலத்துக்கு குறைவான சுற்றளவு மரக்கட்டைகளை, குறைந்தபட்ச ஆரம்ப ஏல விலையாக, டன் ஒன்றுக்கு, 1000 ரூபாயாக நிர்ணயித்து ஏலம் விடவேண்டும்.

அதேபோல், தனியார் நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை, வரும், செப்., 30 ம்தேதிக்குள் தங்கள் சொந்த செலவில் அகற்றி கொள்ள கோரி, நில உரிமையாளர்களுக்கு ஊராட்சி செயலாளர்கள் நோட்டீஸ் வழங்க வேண்டும். அவர்கள் அகற்ற தவறினால், அந்த தனியார் நிலங்களை அரசு அலுவலர்கள் ஆய்வு செய்து, சீமை கருவேல மரங்களை வேறோடு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதிர்ந்த மரங்களை அகற்ற ஏக்கர் ஒன்றுக்கு, 5 ஆயிரம் ரூபாயும், அடர்த்தி குறைவான மரங்களாக இருந்தால், ஏக்கர் ஒன்றுக்கு, 2 ஆயிரம் ரூபாயை உரிமையாளரிடம் இருந்து வசூலிக்க வேண்டும், என, உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரமடைந்துள்ளது. ஊராட்சி செயலர்கள் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் ஒவ்வொரு பகுதியாக சென்று அரசு நிலங்கள் மற்றும் நீர் நிலைகளில் உள்ள மரங்களை அகற்றும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி இப்பணியை ஒரு முறை மட்டும் செய்து விட்டு கண்டுகொள்ளாமல் இருந்து விட க்கூடாது. மீண்டும் எங்கும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து விடாமல், உள்ளாட்சி நிர்வாகங்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும், என, தன்னார்வலர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us