/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாலாபிஷேகம்
/
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாலாபிஷேகம்
ADDED : பிப் 13, 2025 11:25 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச விழாவை முன்னிட்டு, பெண்கள் பால் குடம் எடுத்து வந்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர்.
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோரம், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட, மிகவும் பழமையான சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த, ஒன்பதாம் தேதி கொடியேற்றம் நடந்தது. ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடந்தன. 11ம் தைப்பூச திருவிழா, தேரோட்டம் நடந்தது.
நேற்று காலை, 8:00 மணிக்கு பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்துச் சென்றனர். முன்னதாக ஆண் பக்தர்கள் கையில் வேல் எடுத்துச் செல்ல, அதைத் தொடர்ந்துநூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள், பால் குடங்களை எடுத்துக் கொண்டு, ஊட்டி சாலை வழியாக சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றனர்.
அங்கு அர்ச்சகர் கண்ணன் சுப்பிரமணிய சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தார். பின்பு அலங்கார பூஜை நடந்தது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மதியம் அன்னதானமும், மாலையில் கொடி இறக்கம் மற்றும் மஞ்சள் நீராட்டு நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

