/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யானை - மனித மோதலை தடுக்க குடியிருப்பில் வாழை பயிரிட தடை
/
யானை - மனித மோதலை தடுக்க குடியிருப்பில் வாழை பயிரிட தடை
யானை - மனித மோதலை தடுக்க குடியிருப்பில் வாழை பயிரிட தடை
யானை - மனித மோதலை தடுக்க குடியிருப்பில் வாழை பயிரிட தடை
ADDED : டிச 09, 2024 07:57 AM
வால்பாறை : வால்பாறையில், யானைகள் நடமாடும் பகுதியில் வாழை பயிரிடுவதை எஸ்டேட் தொழிலாளர்கள் தவிர்க்க வேண்டும், என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழக - கேரள எல்லையில், வால்பாறை அமைந்துள்ளது. இந்நகரம் சுற்றுலா ஸ்தலமாக உள்ளதால், மாநிலம் முழுவதிலிமிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர்.
இந்நிலையில், வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இருவனச்சரகங்களில், சமீபகாலமாக யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, தென்மேற்குப்பருவ மழைக்கு பின், வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட் பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளன.
பகல் நேரத்தில் தேயிலை காட்டிலும் முகாமிடுவதால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்படுகிறது. இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் யானைகள், அங்கு பயிரிடப்பட்ட வாழை, பலா, கொய்யா போன்றவைகளை உட்கொள்கின்றன. சில நேரங்களில் எஸ்டேட் பகுதியில் உள்ள வீடு மற்றும் கடைகளையும் இடித்து சேதப்படுத்துகின்றன.
இதனால், வால்பாறையில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, அவர்கள் வனத்துறையினரையும், தமிழக அரசையும் வலியுறுத்தி வருகின்றனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வனத்துறையின் தீவிர நடவடிக்கையால், சமீப காலமாக யானை - மனித மோதல் வெகுவாக குறைந்துள்ளது. யானைகள் நடமாடும் பகுதி குறித்து சம்பந்தப்பட்ட எஸ்டேட் தொழிலாளர்களுக்கு 'வாட்ஸ்அப்' வாயிலாக முன் கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இரவு நேரங்களில், தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நுழையாமல் இருக்க, அங்கு வாழைகளை பயிரிடுவதை தொழிலாளர்கள் தவிர்க்க வேண்டும். இது குறித்து அனைத்து எஸ்டேட் நிர்வாகத்திற்கும் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், யானைக்கு மிகவும் பிடித்தமான ரேஷன் அரிசியை தொழிலாளர்கள் தகுந்த பாதுகாப்புடன் வைக்க வேண்டும். யானைகளால் ஏற்படும் சேதங்களை தவிர்க்க, தொழிலாளர்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
மேலும், வனத்துறையினர் தெரிவிக்கும் அறிவுரைகளை, பொதுமக்கள் மற்றும் எஸ்டேட் தொழிலாளர்கள் தவறாது கடைபிடிக்க வேண்டும்.