/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னைகளுக்கிடையே வாழை பயிரிடுவது அதிகரிப்பு
/
தென்னைகளுக்கிடையே வாழை பயிரிடுவது அதிகரிப்பு
ADDED : மார் 26, 2025 10:16 PM

மேட்டுப்பாளையம்:
காரமடை வட்டாரத்தில் தென்னைகளுக்கு இடையே வாழையை அதிகளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, உள்ளிட்ட பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது.
அதற்கு அடுத்து வாழை, காய்கறிகள் போன்றவை பயிரிடப்படுகின்றன. கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி, வாழை போன்ற பயிர்கள் வெயிலில் வாடி வதங்கின. இதனிடையே அண்மையில் கோடை மழை அப்பகுதிகளில் நன்கு பெய்தது.
இதையடுத்து, தற்போது தென்னைகளுக்கு இடையே வாழையை விவசாயிகள் ஊடுபயிராக பயிரிட்டு வருகின்றனர். இதுகுறித்து காரமடை வட்டார விவசாயிகள் கூறுகையில், வெயிலால் காய்கறிகள் பயிரிடுவதை குறைத்துக் கொண்டோம். மேலும் விளை நிலங்களை கோடை உழவு செய்து தயார்படுத்தி வைத்திருந்தோம். எதிர்பார்த்தது போலவே கோடை மழை நன்கு பெய்தது. இதனால் நிலம் ஈரமாகி உள்ளது. விவசாய கிணறுகளுக்கும் தண்ணீர் கிடைத்துள்ளது. தற்போது வாழையை தென்னைகளுக்கு நடுவில் அதிகளவில் பயிர் செய்து வருகின்றோம். தென்னைகளுக்கிடையே வாழையை பயிரிடுவதால் தென்னைகளுக்கும் அது பலன் தரும், என்றனர்.----