/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழையடி வாழையாய்! கடும் விரக்தியில் வாழை விவசாயிகள்! : கடும் விரக்தியில் வாழை விவசாயிகள்!
/
வாழையடி வாழையாய்! கடும் விரக்தியில் வாழை விவசாயிகள்! : கடும் விரக்தியில் வாழை விவசாயிகள்!
வாழையடி வாழையாய்! கடும் விரக்தியில் வாழை விவசாயிகள்! : கடும் விரக்தியில் வாழை விவசாயிகள்!
வாழையடி வாழையாய்! கடும் விரக்தியில் வாழை விவசாயிகள்! : கடும் விரக்தியில் வாழை விவசாயிகள்!
ADDED : பிப் 28, 2026 06:58 AM

பெ.நா.பாளையம்: சின்னதடாகம் வட்டாரத்தில், பலத்த காற்றால் சேதமடைந்த வாழைகளுக்கு, கடந்த மூன்று ஆண்டுகளாக தோட்டக்கலை துறையால் எவ்வித நஷ்ட ஈடும் வழங்கப்படவில்லை என்று, விவசாயிகள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.
கோவை புறநகர் வடக்கு பகுதியில், மலையோர கிராமங்களில், தென்னை, வாழை, சோளம், காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. ஏற்கனவே இப்பகுதியில் யானை, காட்டு பன்றிகளின் தொல்லையால், விவசாயிகள் பலர் விவசாயத்தை கைவிட்டு, நகரங்களை நோக்கி இடம் பெயர்கின்றனர்.
இந்நிலையில், இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பயிர் சேதத்துக்கு, தோட்டக்கலை துறை போதிய இழப்பு வழங்காமல் இழுத்தடிப்பது, விவசாயிகளிடையே, குறிப்பாக, வாழை விவசாயிகளிடையே தீராத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரு நாட்களுக்கு முன், சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், மடத்துார், வரப்பாளையம் உட்பட பகுதிகளில் பலத்த காற்று வீசியது.
பல இடங்களில் நன்கு வளர்ந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. சேதமான வாழை மரங்களுக்கு, தோட்டக்கலை துறை சார்பில் உரிய இழப்பீடு, கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என, வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.
இதுகுறித்து, சாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில அமைப்பாளர் பிரபு கூறியதாவது:
வாழைமரம் 12 மாத பயிர். ஒரு வாழைக்கன்றை நட்டு பராமரித்து, களைச் செடிகளை அகற்றி, மருந்து தெளித்து, பராமரிக்க ஒரு மரத்துக்கு குறைந்தபட்சம், 200 ரூபாய் செலவாகும். ஒரு ஏக்கரில் 1,000 வாழைக்கன்றுகள் நட்டு வளர்க்கலாம். பலத்த காற்று வீசும் போது, பல வாழை மரங்கள் முறிந்து விழுந்து விடுகின்றன.
ஆயிரம் வாழை மரங்களில், 330 வாழை மரங்கள் விழுந்தால் மட்டுமே அதாவது, 33 சதவீதம் விழுந்தால் மட்டுமே, குறிப்பிட்ட விவசாயி இழப்பீடு பெற தகுதியுடையவர் என வரையறுக்கப்பட்டுள்ளது.
அதுவும், ஒரு குலை தள்ளிய வாழை மரத்துக்கு, வெறும், 6 ரூபாய் மட்டும் அரசு வழங்க உத்தரவு உள்ளது. அந்த ஆறு ரூபாயும் கடந்த மூன்று ஆண்டுகளாக தோட்டக்கலை துறை வழங்கவில்லை.
தோட்டக்கலைத்துறை வழங்கும் ஆறு ரூபாய், அங்குள்ள வாழை மரங்களை அகற்றும் கூலிக்கு கூட தேறாது.
இதுதொடர்பாக, தோட்டக்கலை துறை அதிகாரிகளை அணுகினால், அவர்கள் விவசாயிகளின் விண்ணப்பங்கள், பேரிடர் மேலாண்மை துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்கின்றனர்.
ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில், வாழைமரம் இழப்பு தொடர்பாக எந்த நஷ்டஈடும் வரவு வைக்கப்படவில்லை.
வனத்துறையினர், வனவிலங்குகளால் வாழை மரங்கள் சேதமடைந்தால், மரம் ஒன்றுக்கு, 27 ரூபாய் வழங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தோட்டக்கலைத்துறை வாழை மரங்கள் சேதம் அடைந்தால் மரம் ஒன்றுக்கு, 200 ரூபாய் வீதம் நஷ்ட ஈடு தொகை வழங்கி, அதை உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

