/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இயற்கை சீற்றத்தால் சீரழிந்த வாழை!
/
இயற்கை சீற்றத்தால் சீரழிந்த வாழை!
ADDED : ஆக 14, 2025 08:57 PM
மேட்டுப்பாளையம்; இயற்கை சீற்றத்தால் சேதமடைந்த ஐந்து லட்சம் வாழை மரங்களுக்கு, இழப்பீடு வழங்க வேண்டும் என, பவானி ஆற்று நீர்ப்பாசன விவசாயிகள் சங்க தலைவர் துரைசாமி, மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேட்டுப்பாளையம் தாலுகாவில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்து வருகின்றனர். கடந்த மே மாதம் இயற்கை சீற்றமான, சூறாவளி காற்று வீசியது.
இதில் பல லட்சம் வாழை மரங்கள் சேதம் அடைந்தன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க, ஏற்பாடு செய்வதாக மாவட்ட கலெக்டர் அறிவித்திருந்தார். மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும், விவசாயிகளுக்கு பணம் வழங்கவில்லை.
இது குறித்து மேட்டுப்பாளையம் தாலுகா பவானி ஆற்று நீர்ப் பாசன விவசாயிகள் சங்க தலைவர் துரைசாமி, மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
விவசாயிகள் ஒரு வாழை மரத்துக்கு, 200 ரூபாய் வரை செலவு செய்துள்ளனர். வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்ததால், விவசாயிகள் இந்த ஆண்டிற்கான வருவாயை இழந்து, குடும்ப செலவு தேவைகளுக்கு, கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே சேதம் அடைந்த ஒரு வாழை மரத்துக்கு, 100 ரூபாய்க்கு குறையாமல் இழப்பீடு வழங்க வேண்டும்.
சங்கத்தின் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு மே மாதம் கோரிக்கை மனு அனுப்பிய போது, இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.