/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஏ.பி., பாசன கால்வாய்கள் தூர்வாரவில்லை; செயல்பாட்டுக்கு வராத அரசு விழா அறிவிப்பு
/
பி.ஏ.பி., பாசன கால்வாய்கள் தூர்வாரவில்லை; செயல்பாட்டுக்கு வராத அரசு விழா அறிவிப்பு
பி.ஏ.பி., பாசன கால்வாய்கள் தூர்வாரவில்லை; செயல்பாட்டுக்கு வராத அரசு விழா அறிவிப்பு
பி.ஏ.பி., பாசன கால்வாய்கள் தூர்வாரவில்லை; செயல்பாட்டுக்கு வராத அரசு விழா அறிவிப்பு
ADDED : டிச 03, 2025 05:52 AM

உடுமலை: பி.ஏ.பி., பிரதான மற்றும் இதர கால்வாய்களை பராமரிக்க, ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக முதல்வர் அறிவித்து, நான்கு மாதங்களாகியும், அரசாணை வெளியிடப்படவில்லை; முதலாம் மண்டல பாசனம் துவங்கும் முன் நிதி ஒதுக்க வேண்டும் என ஆயக்கட்டு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து பி.ஏ.பி., நான்கு மண்டலத்துக்குட்பட்ட, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு, பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் வழங்கப்படுகிறது.
கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயத்தின் ஆதாரமாக பி.ஏ.பி., பிரதான கால்வாய் கருதப்படுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இக்கால்வாய், நீண்ட காலமாக புதுப்பிக்கப்படாமல் உள்ளது.
திருமூர்த்தி அணையிலிருந்து வெள்ளகோவில் வரை, 124 கி.மீ., க்கு அமைந்துள்ள பிரதான கால்வாய் பல இடங்களில் வலுவிழந்து காணப்படுகிறது. கான்கிரீட் கரைகள் சரிந்து, மண் சரிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மண்டல பாசனத்தின் போதும், பிரதான கால்வாய் உடைந்து நீரிழப்பு ஏற்படுகிறது; நான்காம் மண்டல பாசனத்தில், பல்லடம் அருகே உடைப்பு ஏற்பட்டு, நீர் நிர்வாகத்தில், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது.
பிரதான கால்வாயை முழுமையாக புதுப்பிக்க, பல முறை கருத்துரு அனுப்பியும், தமிழக அரசு நிதி ஒதுக்கவில்லை.
கடந்த நான்காண்டுகளாக பி.ஏ.பி., சார்ந்த பிரச்னைகளில், அரசு அலட்சியம் காட்டி வருவதாக, கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த, ஆக., மாதம் உடுமலைக்கு வந்த தமிழக முதல்வர், விவசாயிகள் அளித்த கோரிக்கை மனு அடிப்படையில், கால்வாய்களை துார்வார, ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு இதுவரை அரசாணை வெளியிடப்படவில்லை; நிதியும் ஒதுக்கப்படாமல் உள்ளதால், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
அரசாணை பிறப்பிக்கவில்லை இது குறித்து, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தினர் கூறியதாவது:
கடந்த ஆக., மாதம், உடுமலைக்கு வந்த முதல்வரிடம், திருமூர்த்தி அணை நீர்த்தேக்க திட்ட குழு, பகிர்மான குழு சார்பில், பி.ஏ.பி., பாசனம் குறித்து மனு கொடுக்கப்பட்டது.
அதில் மண்டல பாசன காலம் துவங்கும் முன், கால்வாய்களை துார்வார வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாகும். இதன் அடிப்படையில், அரசு விழா மேடையில், கால்வாய்களைத் தூர்வார 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்வர் அறிவித்தார்.
ஆனால் இன்னும் அதற்கான அரசாணை பிறப்பிக்கவில்லை. ஜன., மாதத்தில், முதலாம் மண்டலத்திற்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உள்ள நிலையில், உடனடியாக கால்வாய்களை தூர்வார நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
அப்போது தான், 124 கி.மீ., அமைந்துள்ள பிரதான கால்வாய். 30 கி.மீ.,க்கு அதிகமான தொலைவு அமைந்துள்ள உடுமலை கால்வாய் மற்றும் கிளை கால்வாய்களை துார்வாரி பராமரிக்க முடியும்.
டெல்டா மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதை போல், ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதுகுறித்து முதல்வருக்கு நினைவுட்டல் கடிதம் அனுப்பவுள்ளோம். இவ்வாறு, தெரிவித்தனர்.

