பி.ஏ.பி., பாசன திட்டம் மேம்படுத்தப்படும்: தி.மு.க., ஜெயக்குமார் உறுதி
பி.ஏ.பி., பாசன திட்டம் மேம்படுத்தப்படும்: தி.மு.க., ஜெயக்குமார் உறுதி
ADDED : ஏப் 16, 2026 11:24 PM

உடுமலை: ''பி.ஏ.பி., பாசன திட்ட மேம்பாட்டுக்கு தயாரிக்கப்பட்ட கருத்துருவுக்கு, தி.மு.க., ஆட்சி அமைந்ததும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கும்,'' என உடுமலை தொகுதி தி.மு.க., வேட்பாளர் ஜெயக்குமார் பேசினார்.
உடுமலை தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக போட்டியிடும் ஜெயக்குமார், தொகுதிக்குட்பட்ட நகரம், பொள்ளாச்சி ஒன்றிய கிராமங்களில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:
இரு மாவட்ட பாசன ஆதாரமான பி.ஏ.பி., பாசன திட்டத்தை மேம்படுத்த, 4,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கருத்துரு தயாரிக்கப்பட்டுள்ளது.
வரும் தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க., ஆட்சி அமைந்ததும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பிரதான கால்வாய், கிளை மற்றும் பகிர்மான கால்வாய்கள் புதுப்பிக்கப்படும்.
கடைமடை வரை சீராக பாசன நீர் கிடைக்க செய்வதன் வாயிலாக, நிலத்தடி நீர்மட்டம் நிலையாக இருக்கும். காய்கறி சாகுபடி செழிக்கும். பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய பகுதியில் ஒருங்கிணைந்த சந்தை வளாகம் ஏற்படுத்தப்படும்.
இவ்வளாகத்தில் கால்நடைகள், விவசாயிகளின் விளைபொருட்கள், மதிப்பு கூட்டு பொருட்கள், இயற்கை வேளாண் பொருட்களை சந்தைப்படுத்த கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
சிறு, குறு தொழில் மேம்பாட்டுக்கான, 'சிப்காட்' வணிக வளாகம் கொண்டு வரப்படும். கிராமங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு காண, புதிய கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
உடுமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, புறவழிச்சாலை அமைக்கப்படும். மக்களின் கருத்து கேட்காமல், எந்த புதிய மாவட்டங்களும் ஏற்படுத்தப்படாது.
இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு தேவையான தொழிற்சாலைகள், உடுமலை தொகுதியில் கொண்டு வரப்படும். இதனால், உடுமலை பகுதி மீண்டும் தொழில் நகரமாக மாறும்.
ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகளில், இப்பகுதி இளைஞர்கள் சிறந்து விளங்குகின்றனர். எனவே உடுமலை நகரில் ஸ்டேடியம் அமைக்கப்படும். சிறந்த பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு, விளையாட்டு வீரரர்களுக்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார். பிரசாரத்தின் போது கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
