/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஏ.பி., பாசன கால்வாய்களை புனரமைக்க... நிதி ஒதுக்கியாச்சு! விரைந்து முடிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
பி.ஏ.பி., பாசன கால்வாய்களை புனரமைக்க... நிதி ஒதுக்கியாச்சு! விரைந்து முடிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
பி.ஏ.பி., பாசன கால்வாய்களை புனரமைக்க... நிதி ஒதுக்கியாச்சு! விரைந்து முடிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
பி.ஏ.பி., பாசன கால்வாய்களை புனரமைக்க... நிதி ஒதுக்கியாச்சு! விரைந்து முடிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : டிச 05, 2025 06:48 AM

உடுமலை: பி.ஏ.பி.,பாசன திட்டத்தின் ஆதாரமாக உள்ள பிரதான கால்வாய், கிளைக்கால்வாய் மற்றும் பகிர்மான கால்வாய்களை புதுப்பிக்க, ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படும் என முதல்வர் அறிவித்த நிலையில், மூன்று மாதங்களுக்கு பின் நிதி ஒதுக்கி அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பாசன நிலங்கள் நான்கு மண்டலங்களாக பிரித்து, சுழற்சி முறையில் நீர் வினியோகிக்கப்படுகிறது.
தற்போது, 4ம் மண்டல பாசனம் இறுதிச்சுற்றுக்கு நீர் வழங்கப்படுகிறது. பாசன திட்டத்தின் ஆதாரமாகவும், திருமூர்த்தி அணையிலிருந்து பாசன நிலங்களுக்கு நீர் கொண்டு செல்ல பிரதான கால்வாய், உடுமலை, பூலாங்கிணர், பூசாரிபட்டி, கிளைக்கால்வாய்கள், மற்றும் 2,880 கி.மீ., துாரம் பகிர்மான கால்வாய்கள் அமைந்துள்ளன.
கால்வாய்களை முறையாக பராமரிக்காததால், பாசனத்திற்கு திறக்கப்படும் நீர் இழப்பு அதிகரிப்பு, கடை மடை நிலங்களுக்கு நீர் செல்வதில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
பி.ஏ.பி., திட்டத்தை பாதுகாக்கும் வகையில், ஆண்டு தோறும் பராமரிப்பு நிதி ஒதுக்க வேண்டும், என பாசன சங்க தலைவர்கள், கடந்த ஆக., மாதம் உடுமலைக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு வந்த, முதல்வரிடம் மனு அளித்தனர்.
கோரிக்கை அடிப்படையில், பாசன கால்வாய்களை புனரமைக்க, ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். தொடர்ந்து, அதிகாரிகள் தரப்பில் திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மூன்று மாதமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல், இழுபறியாகி வந்தது.
தற்போது, 4ம் மண்டல பாசனத்துக்கு நீர் வழங்கும் நிலையில், முதல் மண்டல பாசனம், ஜன., ல் துவங்க உள்ளது. இந்நிலையில், விரைவில் நிதி ஒதுக்கி பணியை துவக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தினர். இது குறித்து 'தினமலர்' நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது.
இந்நிலையில், முதல்வர் அறிவித்த, ரூ.10 கோடி நிதி ஒதுக்கி, அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், திருமூர்த்தி கோட்டத்தில், 44 பணிகள், ரூ.2.88 கோடி, பரம்பிக்குளம், 27 பணிகள், ரூ.2.15 கோடி, ஆழியாறு கோட்டம், 83 பணிகள், 4.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில், பிரதான கால்வாய் தளம் மற்றும் கரைகள் பராமரித்தல் மற்றும் மூன்று கோட்டத்திலுள்ள பெரும்பாலான கிளைக்கால்வாய், பகிர்மான கால்வாய்களை துார்வாரி, புனரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே போல், அடுத்து துவங்க உள்ள முதல் மண்டல பாசனத்தின் கீழ், பயன்பெறும் நிலங்களுக்கு நீர் கொண்டு செல்லும், பகிர்மான கால்வாய்களுக்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு அறிவித்து நிதி ஒதுக்கிய நிலையில், விரைவில் பணிகளை துவக்கி, முதல் மண்டல பாசனத்திற்கு முன், கால்வாய்களை புனரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆண்டு தோறும் கால்வாய்களை புதுப்பிக்க நிதி ஒதுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

