/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஏ.பி., கால்வாயில் குப்பை கொட்டாதீங்க! அபராதம் விதிக்கப்படுமென எச்சரிக்கை
/
பி.ஏ.பி., கால்வாயில் குப்பை கொட்டாதீங்க! அபராதம் விதிக்கப்படுமென எச்சரிக்கை
பி.ஏ.பி., கால்வாயில் குப்பை கொட்டாதீங்க! அபராதம் விதிக்கப்படுமென எச்சரிக்கை
பி.ஏ.பி., கால்வாயில் குப்பை கொட்டாதீங்க! அபராதம் விதிக்கப்படுமென எச்சரிக்கை
ADDED : நவ 19, 2024 08:04 PM

பொள்ளாச்சி; 'ஆழியாறு பாசனம், பொள்ளாச்சி கால்வாயில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும்,' என பேரூராட்சி நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
பி.ஏ.பி., திட்டத்தில், ஆழியாறு பாசனப்பகுதிகளில், பொள்ளாச்சி கால்வாய், வேட்டைக்காரன்புதுார் கால்வாய், சேத்துமடை கால்வாய், ஆழியாறு பீடர் கால்வாய் ஆகிய பாசனப்பகுதிகளில், மொத்தம் 44 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
ஆழியாறு முதன்மை ஊட்டுக்கால்வாய், 13.4 கி.மீ., கிளை கால்வாய், 62.9 கி.மீ., துாரம் உடையதாகும்.சேத்துமடை முதன்மை கால்வாய், 8.4 கி.மீ.,; கிளை கால்வாய், 25.89 கி.மீ.,; வேட்டைக்காரன்புதுார் முதன்மை கால்வாய், 17.4 கி.மீ., கிளை கால்வாய், 45 கி.மீ., நீளம் கொண்டது.
பொள்ளாச்சி முதன்மை கால்வாய், 48 கி.மீ., கிளை கால்வாய், 112 கி.மீ., துாரம் கொண்டதாக உள்ளது. ஒவ்வொரு பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு, கிளை கால்வாய் வழியாக பாசனத்துக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன கால்வாய்கள் போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. அதில், பாசனம் இல்லாத காலங்களில் கால்வாயில், குப்பை கழிவுகள், பழைய பொருட்கள், கட்டுமான கழிவு உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்படுகின்றன.
இது தவிர, சிலர் கால்வாய்களில், பழைய பாய், தலையனை, மெத்தை மற்றும் கோழிக்கழிவுகளை வீசுகின்றனர். கால்வாயில் செல்லும் நீருடன் கழிவு நீரும் கலப்பதால், தண்ணீர் முற்றிலும் மாசுபடுவதுடன், துர்நாற்றம் வீசுகிறது.
பாசன காலங்களில், வீசப்படும் கழிவுகள் அடைத்துக்கொள்வதால், நீர் வினியோகிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்த நீரை குடிக்கும் கால்நடைகள் நோய் தாக்குதலுக்கு ஆளாகும் சூழல் உள்ளது. இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜமீன் ஊத்துக்குளி அருகே பி.ஏ.பி., கால்வாய்கள் நீர்வளத்துறை வாயிலாக துாய்மைப்படுத்தப்பட்ட நிலையில், கழிவுகளை கொட்டக்கூடாது என பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை பலகை வைத்துள்ளது.
அதில், 'பி.ஏ.பி., கால்வாயில், குப்பை கொட்டாதீர்; மீறினால், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும், சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்,' என ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி எச்சரித்துள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கழிவு, குப்பை கொட்டுவதை தடுக்க இதுபோன்ற அறிவிப்புகள் வைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது வரவேற்கதக்கது. அதே போன்று மற்ற பகுதிகளிலும் இது போன்று எச்சரிக்கை வைக்க வேண்டும்.
மேலும், நீர்வளத்துறை, உள்ளாட்சி நிர்வாகங்கள், விவசாயிகள் இணைந்து, கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி கால்வாயில் கழிவு கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே கால்வாயை பாதுகாக்க முடியும்,' என்றனர்.

