sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பி.ஏ.பி., நீர் பங்கீடு; பாசன சங்கத்தில் கருத்து மோதல்! கடைமடைக்கு வரவில்லை - வெள்ளகோவில் விவசாயிகள்; மடையை அடைத்து வழங்கினோம் - திட்டக்குழு தலைவர்

/

பி.ஏ.பி., நீர் பங்கீடு; பாசன சங்கத்தில் கருத்து மோதல்! கடைமடைக்கு வரவில்லை - வெள்ளகோவில் விவசாயிகள்; மடையை அடைத்து வழங்கினோம் - திட்டக்குழு தலைவர்

பி.ஏ.பி., நீர் பங்கீடு; பாசன சங்கத்தில் கருத்து மோதல்! கடைமடைக்கு வரவில்லை - வெள்ளகோவில் விவசாயிகள்; மடையை அடைத்து வழங்கினோம் - திட்டக்குழு தலைவர்

பி.ஏ.பி., நீர் பங்கீடு; பாசன சங்கத்தில் கருத்து மோதல்! கடைமடைக்கு வரவில்லை - வெள்ளகோவில் விவசாயிகள்; மடையை அடைத்து வழங்கினோம் - திட்டக்குழு தலைவர்


UPDATED : ஜூன் 21, 2025 06:54 AM

ADDED : ஜூன் 20, 2025 11:50 PM

Google News

UPDATED : ஜூன் 21, 2025 06:54 AM ADDED : ஜூன் 20, 2025 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூன்றாம் மண்டல பாசனத்தில், வெள்ளகோவில் கடைமடை பகுதிகளுக்கு பாசன நீர் முழுமையாக கிடைக்கவில்லை எனக்கூறி, வரும், 24ல், முற்றுகை போராட்டத்தை அப்பகுதி விவசாயிகள் அறிவித்துள்ளனர். அதேநேரத்தில், ஒப்பந்தப்படி நீர் வழங்கப்பட்டுள்ள நிலையில், போராட்டத்தை தடுத்து நிறுத்தாவிட்டால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என, திட்டக்குழு தலைவர் போலீசில் மனு கொடுத்துள்ளார்.

பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்துக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. வரும், ஜூலை 5ம் தேதி வரை, பாசன காலத்தை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளகோவில் சுற்றுவட்டார விவசாயிகள், பி.ஏ.பி., நீர் திருட்டை தவிர்க்க கோரி, போராட்டங்களின் வாயிலாக அரசுக்கு அழுத்தம் கொடுக்க திட்டமிட்டு, ஒருங்கிணைந்து வருகின்றனர்.

'கால்வாயில் திறந்து விடப்படும் நீர், கடைமடையை முழுமையாக வந்து சேர்வதில்லை' என, விவசாயிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, நீர் திருட்டு தடுப்பது தொடர்பான வழிகாட்டுதலையும் பெற்றுள்ளனர்.

இருப்பினும், நீர் திருட்டு தடுப்பது தொடர்பாக, அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கும் விவசாயிகள், போராட்டத்தின் வாயிலாக, அரசின் கவனம் திருப்ப திட்டமிட்டுள்ளனர்.

வரும், 24ம் தேதி காலை, 10:00 மணிக்கு, பொள்ளாச்சி பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ள வெள்ளகோவில் சுற்றுப்பகுதி விவசாயிகள், கால்நடைகளுடன், பெருந்திரளாக பங்கேற்பதென முடிவெடுத்து, ஒவ்வொரு கிராமம் வாரியாக, ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, ஆதரவு திரட்டி வருகின்றனர்.

போராட்டம் ஏன்?


வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது:

பி.ஏ.பி., சட்ட விதிகளின் படி, சமச்சீராக பாசனத்திற்கு நீர் வினியோகிக்க வேண்டும். ஆனால், பொங்கலுார் உட்கோட்ட பகுதிகளுக்கு வினியோகிக்க வேண்டிய நீரில், நான்கில் மூன்று மடங்கு மடைமாற்றி, பகிரங்கமாக நீர் திருட்டில் ஈடுபடுகின்றனர்.

பி.ஏ.பி., கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் திருப்பூர் தெற்கு கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு வழங்கியும், எவ்வித நடவடிக்கையும் இல்லை; வேறு வழியின்றி, முற்றுகை போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

ஏ.எஸ்.பி.,யிடம் மனு


இந்நிலையில், 'வெள்ளக்கோவிலுக்கு ஒப்பந்தப்படி தான் தண்ணீர் வழங்கப்படுகிறது. அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், அப்பகுதியை சேர்ந்த சிலர் போராட்டம் நடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்,' என, பொள்ளாச்சி ஏ.எஸ்.பி.,யிடம், திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் மனு கொடுத்து வலியுறுத்தினார்.

சட்டப்படி நீர்


மனுவில் கூறியிருப்பதாவது:

பரம்பிக்குளம் பிரதான கால்வாய், 124 கி.மீ., துாரம் உள்ளது. அதில், கடை மடையில் வெள்ளக்கோவில் கிளை கால்வாய் பிரிகிறது. கிளை கால்வாயில் ஒரு மண்டலத்துக்கு, 12 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இதற்கு, 120 நாட்களில் வினாடிக்கு, 100 கனஅடி வீதம், 14 நாட்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும்.தற்போது, 100 கனஅடிக்கு பதிலாக, 131 கனஅடி வீதம், 15 நாட்களுக்கு, கால்வாயில், 4.5 அடி உயரத்துக்கு நீர் வழங்கப்படுகிறது.

அவர்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக பாசனம் பெறும் மேல் பகுதியில் உள்ள கால்வாய்களை அடைத்து, கொடுக்க வேண்டியதுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் நீர் பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டத்தின்படி வெள்ளக்கோவில் கால்வாய்க்கு கொடுக்கும் தண்ணீரை அங்குள்ள பாசன சங்க தலைவர்கள், பகிர்மான குழு தலைவர்கள், நீர்வளத்துறை அதிகாரிகளை வைத்து பகிர்ந்து பாய்த்துக்கொள்ள வேண்டும்.

ஏற்கனவே ஒப்புதல்


ஆனால், அவ்வாறு நடைமுறை இல்லை. 12 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுவதும் இல்லை. அதிகபட்சமாக, ஐந்தாயிரம் ஏக்கர் நிலங்கள் மட்டுமே பாசனம் பெறுகின்றன. இந்நிலையில் தண்ணீர் பற்றாக்குறை என போராட்டம் செய்வது ஏற்புடையது இல்லை.

கடந்த, 2021ம் ஆண்டு இதுபோன்று காங்கயம் நகரில், போராட்டம் நடத்தி, 4.5 அடி தண்ணீர் வேண்டும் என்றும், தற்போது அதிகபட்சமாக, 4.4 அடி தண்ணீருக்கு ஒத்துக்கொள்கிறோம். எதிர்காலத்தில், 4.5 அடி தண்ணீர் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒப்பந்தம் போட்டு கையெழுத்திட்டுள்ளனர். அதன்படி தற்போது தண்ணீர் வழங்கப்படுகிறது.

தடுத்து நிறுத்துங்க!


இந்நிலையில், மீண்டும் போராட்டத்தை அறிவித்து இருப்பது மேல் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இந்த மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, ஒருவரின் தவறான செயலை தடுத்து நிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் மேல் பகுதி விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இதனால், சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

- நிருபர் குழு -






      Dinamalar
      Follow us