/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஏ.பி., நீர் திருட்டு; மின் இணைப்பை துண்டிக்கணும்! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
/
பி.ஏ.பி., நீர் திருட்டு; மின் இணைப்பை துண்டிக்கணும்! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
பி.ஏ.பி., நீர் திருட்டு; மின் இணைப்பை துண்டிக்கணும்! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
பி.ஏ.பி., நீர் திருட்டு; மின் இணைப்பை துண்டிக்கணும்! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : அக் 04, 2024 10:22 PM

பொள்ளாச்சி : 'பி.ஏ.பி., பாசன தண்ணீரை திருடினால், சம்பந்தப்பட்ட நிலத்தின் விவசாய மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்,' என, குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா தலைமை வகித்தார். சப் - கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயகுமார் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
விவசாயிகள் பேசியதாவது:
பி.ஏ.பி., கால்வாயில் பாசன நீர் திருட்டு தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கண்காணிப்பு பணியின் போது, போலீசார் வருவதில்லை; புகார் கொடுத்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதில்லை.
போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், சம்பந்தப்பட்ட நிலத்தின் விவசாய மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.
தென்னை நார் துகள்கள், நிலத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றப்படுகிறது. இதனால், விளைநிலங்கள் பாதிக்கப்படுகின்றன. தென்னை நார் தொழிற்சாலைகளினால் பாதிப்புகள் ஏற்படுவதாக புகார் கொடுத்தாலும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுப்பதில்லை.
தண்ணீர் திருடி காயர் பித்துக்கு பயன்படுத்தப்படுகிறது. கல்குவாரிகளில் தேங்கும் நீரையும் எடுத்துச் சென்று பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படுகிறது. மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் கொடுத்தால் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழைப்பொழிவு அதிகளவு இருந்தால் மட்டுமே, உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க முடியும். தற்போது, பாசனத்துக்கே தண்ணீர் தட்டுப்பாடு உள்ள சூழலில், உப்பாறுக்கு தண்ணீர் வழங்க வேண்டுமென சிலர் போராடுகின்றனர். உப்பாறு அணைக்கு தண்ணீர் செல்லும் வழித்தடத்தில், 15 செக்டேம்கள் உள்ளன. இவற்றை கடந்து நீர் செல்லாத நிலை உள்ளது.
அங்கலக்குறிச்சி கால்வாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்து அகற்ற வேண்டும். காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகம் உள்ளதால், கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மண்ணுார் அருகே, தாவளத்தில் தெருநாய்கள் அதிகளவில் உள்ளதால் மக்கள் பாதிக்கின்றனர். அவற்றை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு பரவும் அம்மை நோயை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் செலுத்த வேண்டும்.
நீர்வள ஆதாரத்துறைக்கு சொந்தமான ஊட்டுக்கால்வாய்களை துார்வார வேண்டும். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்ய வேண்டும்.
ஜமீன் ஊத்துக்குளி ராமநாதபுரம் காலனியில் உள்ள குழந்தைகள் மையம் சேதமடைந்துள்ளது. அதை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.
சப் - கலெக்டர் பேசுகையில், ''தென்னை நார் துகள்கள் பிரச்னை குறித்தும், விவசாயிகள் கூறிய புகார்கள் குறித்து ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்கப்படும். விவசாயிகளின் பிரச்னைகளுக்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.