ADDED : செப் 23, 2026 07:24 PM
உடுமலை: சின்னவீரம்பட்டி ஊராட்சியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மா.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மா.கம்யூ.., கிளைச்செயலாளர் சிவராமன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சியின் நகரச்செயலாளர் தண்டபாணி, மாவட்ட குழு உறுப்பினர் பஞ்சலிங்கம் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், ஊராட்சியிலுள்ள பொதுக்கிணறுகள், குளம், குட்டை மற்றும் நீர்வழிப்பாதைகளை சீரமைக்க வேண்டும். குடிநீர் வினியோகத்தை சீராக்கி தட்டுப்பாட்டை தவிர்க்க வேண்டும்.
குடியிருப்புகளில் சேகரிக்கப்படும் குப்பையை, தரம் பிரித்து மறு சுழற்சி செய்யப்படுவதில்லை; இதனால், சுகாதார சீர்கேடு அதிகரித்துள்ளது. மண்பாதைகளை தார்சாலையாக மேம்படுத்த வேண்டும்.
விவசாய தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சின்னவீரம்பட்டி ஊராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மா.கம்யூ., கட்சியினர் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.
