ADDED : நவ 01, 2025 05:24 AM

கோவை: கோவை காட்டூர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவு மாற்றுத்திறனாளிகள் பள்ளி செயல்படுகிறது.
53 மாற்றுத்திறனாளிகள் பராமரிக்கப்படுகின்றனர். கல்வி கற்பிப்பது, விளையாட்டு கற்றுக் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகள் அளிக்கப்படுகின்றன. இக்குழந்தைகளை அழைத்து வர வாகன வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர், காலையில் இருந்து மாலை வரை அதே வளாகத்தில் காத்திருக்கின்றனர். இவர்களுக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க, பாக்கு மட்டை உருவாக்கும் மையம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது .
மாநகராட்சி சார்பில், 9 லட்சம் ரூபாயில் கூடாரம் அமைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் ஆறு பேர் பணிபுரியலாம். ஆறு சைஸ்களில் பாக்கு மட்டை தயாரிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது. நாளொன்றுக்கு 1,260 தட்டு தயாரிக்க கணக்கிடப்பட்டுள்ளது.
ஒருவர் மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் ஈட்டும் வகையில், இம்மையத்தை செயல் படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இம்மையத்தை, எம்.பி. ராஜ்குமார், கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.

