ADDED : அக் 11, 2026 06:24 PM

வால்பாறை: நீர்வரத்து குறைந்த நிலையில், அதிரப்பள்ளி அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கியதால், இருமாநில சுற்றுலாபயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம், வால்பாறையிலிருந்து கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் அதிரப்பள்ளி அருவி அமைந்துள்ளது. இங்கு கடந்த நான்கு மாதங்களாக, தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வந்ததால், அங்குள்ள அதிரப்பள்ளி, சார்பா உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாபயணியர் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு முற்றிலுமாக குறைந்து, ஆறு மற்றும் அருவிகளில் நீர்வரத்து குறைந்து வருவதால், சுற்றுலாபயணியர் குளிக்க அனுமதி வழங்கியுள்ளனர்.
வனத்துறையினர் அறிவிப்பால், இருமாநில சுற்றுலாபயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘அதிரப்பள்ளி அருவியில் குளிக்க ஒரு நபருக்கு கட்டணமாக, 60 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வாரவிடுமுறை நாள் என்பதால் சுற்றுலாபயணியர் அதிக அளவில் அதிரப்பள்ளி அருவியில் குளிக்க திரண்டுள்ளனர்,’ என்றனர்.
