UPDATED : அக் 11, 2026 06:21 PM
ADDED : அக் 11, 2026 06:16 PM
கருமத்தம்பட்டி:'இயற்கையை பாதுகாப்போம், பசுமையை வளர்த்து, தண்ணீரை சேமிப்போம்' எனும் கருத்தை வலியுறுத்தி, காடுவெட்டி பாளையத்தில், விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
'எல் நினோ' பாதிப்பால், உலகின் பல பகுதிகளில் வெப்பம் அதிகரித்து, மழை குறைந்து, விவசாயமும், இயற்கை சூழலும் பாதிப்பு அடைந்து வருகிறது. இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'வி தி லீடர்ஸ்' அமைப்பு சார்பில், காடுவெட்டி பாளையத்தில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. நான்கு வயது முதல், 14 வயது வரையுள்ள மாணவ, மாணவியர், 550 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
போட்டியை, அமைப்பை சேர்ந்த பழனிசாமி, சதாசிவன், தொழிலதிபர் பழனிசாமி, கே.கே.வித்யாலயா பள்ளி தாளாளர் பொன்னுசாமி, ஈஸ்வர மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். நான்கு பிரிவுகளில் நடந்த ஓட்டத்தில் மாணவர், மாணவியர் பங்கேற்று பரிசுகள், சான்றிதழ்களை பெற்றனர். பிரபஞ்ச அமைதி ஆசிரம குருஜி சிவாத்மா ஆசியுரை வழங்கினார்.
'இயற்கை வளங்களை ஒவ்வொருவரும் பாதுகாக்க உறுதி ஏற்க வேண்டும். நீரை சேமிக்கவும், பசுமையை மேம்படுத்த மரங்களை வளர்ப்பதும் ஒவ்வொருவரின் கடமை. இதை கடைபிடித்து வாழ்ந்தால், எதிர்கால சமுதாயம் ஆரோக்கியமானதாகவும், பசுமையாகவும் மாறும்' என, பரிசளிப்பு விழாவில் வலியுறுத்தப்பட்டது. போட்டியை, சிவகுமார் ஒருங்கிணைத்தார்.
